பெரியாரை முழுமையாக அறிய புதிய இணையதளம் தொடக்கம்..
உலக தமிழர்கள் தந்தை பெரியாரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழக அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
www.periyarquizster.com என்ற இந்த புதிய இணையதளத்தின் பயன்பாட்டை கி.வீரமணி தொடங்கி வைத்தார். மேலும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கப்பட்ட தந்தை பெரியார் 1000 வினா-விடை என்ற புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். புதிய இணையதளத்தில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய 3 மொழிகளில் பெரியாரை பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இணையதளம் மட்டுமின்றி ஆப்பிள் இயங்கு தளத்தில் ஐ.போன், ஐ.பேடு கருவிக்களுக்கான செயலிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் உள்ள தமிழர்களும், தமிழர் அல்லாதவர்களும் தந்தை பெரியார் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, பணிகள், சாதனைகள் வினா-விடை வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் வாயிலாக யார் வேண்டுமானாலும் ‘பெரியார் 1000 வினா-விடை‘ போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கேள்விகள் வரும்.
இதில், எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் உரிய சான்றிதழ்களை உடனுக்குடன் கணினியிலேயே பெற்று அச்செடுத்து கொள்ளலாம். பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக வீரமணி தெரிவித்தார்.