தங்கம் விலை பவுனுக்கு ரூ.264 குறைந்தது..
சென்னை மார்க்கெட்டில் தங்கத்தின் விலை இன்று காலை பவுனுக்கு ரூ.264 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் காணப்படுகிறது. கடந்த மாதம் துவக்கத்தில் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதம் பவுனுக்கு ரூ.300 வரை தங்கத்தின் விலை குறைந்தது. அதை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக பவுனுக்கு ரூ.260 வரை உயர்ந்தது. இந்நிலையில், கடந்த வாரம் திங்கள் கிழமை யாரும் எதிர்பாராத வகையில், 15 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை பவுன் ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ஒரு கிராம் ரூ.2,499க்கும் ஒரு பவுன் ரூ.19,992க்கும் விற்பனையானது.
அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. பின்னர் மீண்டும் பழையபடி பவுனுக்கு ரூ.20 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.264 குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.2,550க்கும், ஒரு பவுன் ரூ.20,400க்கும் விற்பனையானது. இன்று காலை கிராம் ஒன்றுக்கு ரூ.33 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.2,517க்கும், ஒரு பவுன் ரூ.20,136க்கும் விற்பனையானது.