வளைகின்றதா ஐபோன் 6..
ஐபோன் 6 ப்ளஸ் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், சில வாடிக்கையாளர்கள், தங்கள் கால்சட்டை பின்புறப் பைகளில் அதனை வைத்து எடுத்துப் பயன்படுத்தியபோது, அது வளைவதனைக் கண்டு, உடன் பரபரப்பான தகவல்களை வெளியிட்டனர். இந்த தகவல்களைப் பெற்ற ஆப்பிள் நிறுவனம், இது குறித்து ஆய்வு செய்து, பதில் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. வழக்கமான முறையில் ஐபோன் 6 பயன்படுத்துபவர்களின் போன் வளையாது என்று தெரிவித்துள்ளது.
அசாதரணமான முறையில், வளையும்படி அதனைக் கையாள்பவர்களில், ஒரு சிலரின் போன்கள் மட்டுமே வளைந்துள்ளன. கால் சட்டைகளின் பின்புறப் பைகளில் தொடர்ந்து பல மணி நேரம் வளையும் வகையில் வைத்திருந்துவிட்டு எடுத்துப் பார்த்தால், வளைந்த நிலையில் இருக்க வாய்ப்புண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 6 ப்ளஸ், விற்பனைக்கு வெளியாகும் முன்னர், பலவிதமான வளைக்கும் சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது என்றும், அதன் தாங்கும் சக்தி சோதனையிடப்பட்டதாகவும், நல்ல நிலையில் அது தொடர்ந்து இயங்கும் என்று அறிந்த பின்னரே, வெளியிடப்பட்டதாகவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. பல லட்சம் போன்கள் விற்பனையான நிலையில், ஒரு சிலரே இந்த வகையில் குற்றச் சாட்டினை தெரிவித்துள்ளதாகவும், சமூக இணைய தளங்கள் வழியாக இது பெரிது படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வளைந்த ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் மொபைல் போன்களுக்குப் பதிலாகப் புதிய போன்களைத் தருவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. ஆனால், வளைந்த போன்களைச் சோதனை செய்து, வளைந்ததின் காரணத்தினை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே தர முடியும் என அறிவித்துள்ளது. எனவே, உங்கள் கால் சட்டையின் பின்புற பாக்கெட்டில் வைத்து, ஐபோன் வளைந்தால், அருகில் உள்ள ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர் மையக் கிளையை அணுகவும்.