Breaking News

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குப் பணமே குறிக்கோள் - ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் குற்றச்சாட்டு..

                                                   

இந்திய கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளாததை அடுத்து, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், ’இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டை வணிகமாகக் கருதுகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளது.
 
இது குறித்து இன்சியானில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் அல்-ஷபா கூறுகையில், “இரண்டாவது முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் அணியை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பவில்லை. அவர்கள் விளையாட்டை வளர்த்தெடுப்பதற்கு விரும்பவில்லை. மாறாக அதை வியாபாரத்திற்கான சந்தைப் பொருளாக நினைப்பதாகக் கருதுகிறேன்” என்றார்.
 
மேலும் அவர், ஆசியாவிலும், காமன்வெல்த் நாடுகளிலும் கிரிக்கெட் விளையாட்டு பிரபலமானதாக இருக்கிறது. இந்தியாவிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறாத கபடி போன்ற போட்டிகள் கூட, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம் பெற்றுள்ளன என்றும் இதனால் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்காதது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.

                 
 
இந்திய கிரிக்கெட் அணி, சீனாவின் குவாங்சோ நகரில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஆசியப் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.