சொத்து குவிப்பின் பிரமாண்டம் சதிராடும் சமூக வலைத்தளங்கள்..
ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா.. வெளியே வருவாரா, மாட்டாரா என்பதுதான் எல்லா பக்கமும் எதிரொலிக்கும் கேள்வியாக இருக்கிறது. வேலூர், புழல் சிறைகளின் பெயர்கள் எல்லாம் மங்கிவிட்டது. பெங்களூரின் பரப்பன அக்ரஹார சிறை வளாகம்தான் எல்லா செய்தியிலும் எல்லோர் பேச்சிலும் அடிபடுகிறது. ஆள், அம்பு, அதிகாரத்தோடு மாநிலத்தின் முதல்வராக வலம் வந்தவர், ஒரு சனிக்கிழமை மாலை இந்த அக்ரஹாரத்தின் காராகிரகத்தில் தள்ளப்படுவார் என்பது அவரே நினைத்துப் பார்க்காதது. உள்ளே போனது தியாகத்தால் அல்ல; ஊழலால் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், எதுவுமே செய்யாத அப்பாவியை தண்டித்ததாக ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும், பிரசாரங்களும் நடத்தப்பட்டன...இன்னும் நடத்தப்படுகின்றன. நம்பத்தான் யாரும் தயாராக இல்லை. ஏனெனில் காலம் அப்படி. ஊழலை மறைத்து தியாகமாக மாற்றும் முயற்சியெல்லாம் இப்போது எடுபடாது. அந்த காலம் மலையேறிவிட்டது என்பது உடனுக்குடன் தெளிவாக்கப்பட்டு வருகிறது.
7402 என்ற கைதி எண்ணோடு இப்போது சிறையில் இருக்கும் ஜெயலலிதா, இதற்கான வித்தை ஊன்றியது 1991 - 1996 காலகட்டத்தில்.
இந்த ஐந்தே ஆண்டுகளில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் அவரது உற்ற தோழி சசிகலாவும் இணைந்து, அதிகாரத்தின் துணையோடு சொத்துகளை குவித்துப்போட்டது மலைக்க வைக்கிறது. 66 கோடியே 65 லட்சம் சொத்துகள் குவிக்கப்பட்டிருக்கிறது. இது அந்த காலகட்டத்தின் மதிப்பு. கணக்கில்லாமல் வாரிக்குவிக்கப்பட்ட அந்த நகை, நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டிச் செல்லும்.ஆனால், இந்த படுபயங்கர ஊழலும் முறைகேடும் நடந்த காலத்தில் இதைப்பற்றிய முழுமையான விவரம் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. இதன் தாக்கமும் குறைவாகவே இருந்தது. அப்போதைய பெரும்பாலான இளம் தலைமுறைக்கு இந்த ஊழல் தாண்டவம் பற்றி சரியான புரிதல் இல்லாமலே இருந்தது. சமூக வலைத்தளங்கள் வராத காலம் அது. ஒன்றிரண்டு முக்கிய நாளிதழ்கள் மட்டுமே இருந்தன. செய்திகளின் மீது பெரிய பிடிப்போ, ஈர்ப்போ இல்லாமல்தான் இளைஞர்கள் இருந்தனர். அடுக்கடுக்கான வாய்தாக்கள், எத்தனையோ தடைகள் என எல்லாவற்றையும் தாண்டி, பதினெட்டு ஆண்டு நெடிய பயணத்துக்குப் பின் இப்போதுதான் இந்த ஊழல் வழக்கில் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ஊழல் நடந்த காலத்தின் இளைஞர்கள் இப்போது தங்களின் முப்பது, நாற்பது வயதுகளில் உள்ளனர். சொத்துக் குவிப்பு முறைகேட்டின் முழுப் பரிமாணம் இப்போதுதான் அவர்களுக்கு தெரியவர தொடங்கியிருக்கிறது. நாளுக்குநாள் இந்த வழக்கு குறித்து வரும் அதிரடி விவரங்கள் அவர்களின் தலையைச் சுற்ற வைக்கிறது.
இதற்கு காரணம் நவீன யுகத்தின் பலனே. பத்திரிகைகளின், செய்தி அலைவரிசைகளின் எண்ணிக்கை கூடியிருந்தாலும் அவற்றில் ஒன்றிரண்டு மட்டுமே இந்த வழக்கின் உண்மை நிலையை வெளிச்சம்போட்டு காட்டி வருகின்றன. மற்றவை விளம்பர வருவாய்க்கும் அரசின் பகையை சம்பாதிக்க விரும்பாததாலும் திரைமூடி மேலோட்டமாக இந்த விவகாரத்தை அணுகுகின்றன. இவையெல்லாம் சிறுதடைகள்தான். இந்தக்கால இளைஞர்கள் அரசியல் முதிர்ச்சியுடனும் போலியை அடையாளம் காணுபவர்களாகவும் கொடுக்கப்பட்ட தண்டனை எதற்கானது என்பதை துல்லியமாக அறிந்துகொள்ளும் சக்தி படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஜெயலலிதாவும் அவரது அணுக்க கும்பலும் வளைத்துப்போட்ட சொத்துகளின் பட்டியலை, இதில் வழக்காடும் வழக்கறிஞர்கள் தெரிந்திருப்பதை விட செம்மையாக தெரிந்துவைத்திருக்கிறார்கள். சரியான நாளிதழ்கள் தரும் தகவல்களோடு பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்கள் தரும் நிமிடத்துக்குநிமிடமான விவரங்களால் இந்த ஊழல் வழக்கின் முழுப்பரிமாணத்தையும் அறிந்துவைத்திருக்கிறார்கள்.
இதனால் தினம்தோறும் தீர்ப்புக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் வலுவிழந்து நீர்த்துபோய் வருகின்றன. பிரபல நடிகையாக இருந்ததாலும் பரம்பரை சொத்தாலும்தான் இவ்வளவு இடங்களை ஜெயலலிதா வாங்கிப் போட்டிருக்கிறார் என்ற சொத்தை வாதங்கள் எல்லாம், உண்மை நிலவரங்களை ஆதியோடுஅந்தமாக தெரிந்துகொண்டிருக்கும் இந்த தலைமுறையிடம் செல்லாததாகி வருகிறது. அதனால்தான் திரைத்துறை உள்பட சில அமைப்புகள் நடத்திய போராட்டம் நகைப்புக்கு இடமாகியது. இந்த தகவல்புரட்சி யுகத்தில், புரட்டல் வேலைகள் செய்ததை எல்லாம் மறைத்து அனுதாபம் கறக்க முயல்வது என்பது கல்லில் நார் உரிப்பது போன்றது. புரிந்துகொண்டால் சரி.