Breaking News

‘வாட்ஸ்–அப்’பில் இளம்பெண் படத்துடன் அவதூறு நடவடிக்கை எடுக்க ‘சைபர் கிரைம்’ போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு

வீடு புகுந்து கொள்ளையடிப்பதாக செல்போன் ‘வாட்ஸ்–அப்’பில் இளம்பெண் படத்துடன் வெளியான அவதூறு தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

‘டிப்–டாப்’ இளம்பெண் படம்

வீடுகளில் தனியாக வசிக்கும் பெண்களை நோட்டமிட்டு ‘டிப்–டாப்’ இளம்பெண் ஒருவர் தனது வசீகர பேச்சால் மயக்கி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அவருடைய படத்துடன் செல்போன் ‘வாட்ஸ்–அப்’பில் கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது.

இதற்கிடையில் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியான இளம்பெண்ணின் பெயர் ரேணுகா நாயர் என்பதும், தானேயை சேர்ந்த அவருடைய படத்தை யாரோ உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பிவிட்டார்கள் என்றும் அவருடைய தம்பி தானே போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தானே போலீசார் நடத்திய விசாரணையில் அவதூறு ‘வாட்ஸ்–அப்’ தகவல் சென்னையில் இருந்து பரவியது தெரிய வந்தது. இதுகுறித்து தானே போலீசார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

3 இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுரை

சென்னையை சேர்ந்த யாரோ அனுப்பிய இந்த ‘வாட்ஸ்–அப்’ தகவல் துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் முனுசாமி, பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் ஆகியோருக்கும் வந்துள்ளது. அவர்கள் அதை மற்றவர்களுக்கு அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உயரதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் போலீசாருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது ‘வாட்ஸ்–அப்’ தகவலை உண்மை தன்மை அறியாமல் மற்றவர்களுக்கு அனுப்பிய போலீசாரை அழைத்து பேசினார். அப்போது 3 இன்ஸ்பெக்டர்களும், மக்கள் முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே மற்றவர்களுக்கு அனுப்பியதாக கமிஷனரிடம் தெரிவித்தனர். அதற்கு கமிஷனர் ஜார்ஜ், எந்த ஒரு தகவலையும் உண்மை தன்மையை அறியாமல் பரப்பக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கமிஷனர் எச்சரிக்கை

இளம்பெண் படத்துடன் அவதூறாக ‘வாட்ஸ்–அப்’ தகவலை அனுப்பிய நபரை விரைந்து கண்டுபிடிக்க ‘சைபர் கிரைம்’ போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் ‘வாட்ஸ்–அப்’ மூலம் அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.