கேள்விகளோடு அழைக்கும் ஃபேஸ்புக் நிறுவனர்!
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க்கிடம் எப்போதேனும் கேள்வி கேட்க விரும்பியிருக்கிறீர்களா? இந்த எண்ணம் இருந்தாலோ அல்லது, ஜக்கர்பெர்க்கிடம் கேட்டே ஆக வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தாலோ அதற்கான வாய்ப்பை பேஸ்புக் நிறுவனரே ஏற்படுத்தி தந்திருக்கிறார்.
ஆம், மார்க் ஜக்கர்பெர்க் வரும் 6 ம் தேதி ஃபேஸ்புக் பயனாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கிறார். இதற்கான கேள்வி- பதில் நிகழ்ச்சியை அவர் ஃபேஸ்புக் மூலமே நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஃபேஸ்புக் மூலம் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல் பொது கேள்வி-பதில் நிகழ்ச்சியை 6 ம் தேதி 2 மணி அளவில் நடத்த இருப்பதாகவும், ஒரு மணி நேரம் கேளவிகளுக்கு பதில் அளிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதல் நிகழ்ச்சி என குறிப்பிட்டிருப்பதால் மார்க் தொடர்ந்து இது போன்ற கேள்வி -பதில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதாக கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி இணையத்தில் நேரடியாக ஸ்டீரிமிங் முறையில் ஒளிபரப்பாக உள்ளது. நேரடி ஒளிபரப்பை தவறவிட்டவர்களுக்காக பின்னர் வீடியோ பதிவேற்றப்படும் என்றும் மார்க் குறிப்பிட்டுள்ளார்.
ஜக்கர்பெர்க்கிடம் எப்படி கேள்வி கேட்பது என கேட்கலாம்? ஃபேஸ்புக்கில் உள்ள இந்த அறிவிப்பு பக்கத்தில் பின்னூட்டங்கள் பகுதியில் கருத்து தெரிவிப்பது போல கேள்வி கேட்கலாம். நீங்கள் நினைக்கும் கேள்வியையும் கேட்கலாம். அல்லது மற்றவர்கள் கேட்டுள்ள கேள்வியை லைக் செய்யலாம். அதிக லைக் கொண்ட கேள்விகள் பதில் அளிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் இந்த பகுதியில் கேள்விகளை சமர்பித்து வருகின்றனர்.லைக் பட்டன் போல டிஸ்லைக் பட்டன் எப்போது வரும் என்பதில் துவங்கி, என்னோட விருப்பமான ஃபேஸ்புக் பக்கம் ஏன் காணாமல் போச்சு? என்பது வரை பலவித கேள்விகள் பதிவாகியுள்ளன.
அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் அரசின் தணிக்கை முயற்சி தொடர்பான கருத்தை கேட்டுள்ளார். இன்னொருவர் , எப்போதேனும் முன் அறிவிப்பு இல்லாமல் ஃபேஸ்புக் சேவையை ஒரு மணி நேரம் நிறுத்துவைத்து, அதன் சமூக தாக்கத்தை அறிய விரும்பியது உண்டா?” என கேட்டிருக்கிறார். ஒரு சிலர் ஃபேஸ்புக்கின் பழைய அம்சங்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
உங்கள் அந்தரங்கத்தை எப்படி பாதுகாத்து கொள்கிறீர்கள் என ஒருவர் கேட்டுள்ளார். இன்னொருவர் , நீங்கள் ஃபேஸ்புக்கை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் என கேட்டுள்ளார். நீங்கள் எப்போதேனும் மீண்டும் கல்லூரிக்கு சென்று பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என நினைத்ததுண்டா? என ஒருவர் கேட்டுள்ளார். அல்லது வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி எத்தனை முக்கியம் என்ற துணை கேள்வியும் கேட்டுள்ளார்.
ஃபேஸ்புக்கை நிறுவியிருக்காவிட்டால் என்ன செய்திருப்பீர்கள் என ஒருவர் ஆர்வமுடன் கேட்டிருக்கிறார். துவேஷ பக்கங்களை ஏன் நீக்ககூடாது என ஒருவர் ஆதங்கத்தோடு கேட்டுள்ளார். பல கேள்விகள் சுவாரஸ்யமாகவும், சிந்தனைக்குரியதாகவும் இருக்கின்றன.
பார்ப்போம் இவற்றுக்கு மார்க் என்ன பதில் சொல்கிறார் என்று?
மார்கிடம் கேள்வி கேட்க: https://www.facebook.com/qawithmark