Breaking News

மரங்களுக்கு ஊட்டசத்து ஊட்டி அசத்தும் மாணவர்கள்!

சத்துக் குறைபாடு உண்டான மனிதனுக்குத் துளையளவில் குளுக்கோஸ் ஏற்றி ஊட்டச்சத்து ஊட்டிவிடலாம். ஆனால் சத்துக் குறைபாடு உண்டான மரங்களுக்குத் துளையளவில் ஊட்டச்சத்து ஊட்டமுடியுமா? முடியும் என்கிறார்கள் இந்த மாணவர்கள்.

நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரால் சிறிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் "சொட்டு நீர் பாசனம்" (drip irrigation). சாதாரண திட்டம்தானே என்று அலட்சியப்படுத்தாமல் "பயன்படா பாட்டில் மூலமான சொட்டு நீர் பாசனம்" (waste bottle drip irrigation) என்று இதையே விரிவுபடுத்தி கல்லூரி முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் தூத்துக்குடி இன்பேன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

எத்தனையோ சாலைகளில், எத்தனையோ வளாகங்களில், எத்தனையோ கல்லூரிகளில் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன, நடப்பட்டு வருகின்றன. நடப்படும் எல்லா இடங்களிலும் அவை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? என்றால் கொஞ்சம் கவலையோடே சொல்லலாம் இல்லையென்று.

மரங்கள் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கப்படுகையில் சில குறைபாடுகள் நமக்குத் தெரியாமலேயே ஏற்பட்டு விடுகின்றன. மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதில் என்ன குறைபாடு இருக்கிறது? அதிகப்படியான நீரூட்டப்படுவதால் நீர் அதிக உபரியாகவே பல்வேறு இடங்களில் வீணடிக்கப்படுகிறது. தோட்டங்களில் சில குறிப்பிட்ட இடங்களில் மிக அதிகமாக ஊற்றப்படும் நீரினால் மண் குலைந்து சகதிக்காடாக உருவாகும் வாய்ப்பும் உண்டு. இயற்கையாகவே மரத்தோடு இணைந்திருக்கும் மண்ணின் அழகையும் இது கெடுக்கக்கூடும். நீர் உயிரின் ஆதாரம், மரம் நீரின் ஆதாரம், வேர் மரத்தின் ஆதாரம். வேர் மட்டும்தான் மரத்தில் நீரை உறிஞ்சிக்கொள்ளும் பகுதி. அதற்கு மட்டும் நீரூற்றி நீரைச் சிக்கனப்படுத்தி மண்ணின் அழகையும் கெடுக்காமல் இருக்கக் கைகொடுக்கிறது இந்த "பயன்படா பாட்டில் மூலமான சொட்டு நீர் பாசனம்".

இந்தத் திட்டத்தின் இன்னொரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இயற்கையின் முக்கிய எதிரியான பிளாஸ்டிக்கை இயற்கையின் நண்பனாக்கியிருப்பது தான். இந்த ஆச்சரியக்குறிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் இம்மாணவர்கள். செலவே இல்லாமல் கல்லூரியில் அங்குமிங்கும் கிடக்கும் சின்னச் சின்னப் பொருட்களை வைத்தே இதை முழுவதுமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒரு மீட்டர் உயரம் வரையுள்ள மரக்கன்றுகளுக்கு இம்முறையைப் பயன்படுத்தலாம். செடி, கொடிகளுக்கு மிகவும் பயன்படும் முறை இது. அவைகளுக்கு அருகில் 15 சென்டிமீட்டர் அளவில் தோண்டப்பட்ட குழியில் இரும்புக்கம்பி இறக்கப்படுகிறது. இரும்புக்கம்பியின் உயரம் பிளாஸ்டிக் பாட்டிலின் உயரத்தைப் பொறுத்து அமைகிறது. உபயோகிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒன்று முதல் 2½ லிட்டர் அளவில் இம்முறையில் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் பாட்டிலின் கீழ் பகுதி வெட்டப்பட்டு தலைகீழாக இரும்புக்கம்பியுடன் சேர்த்துக் கட்டப்படுகிறது. பாட்டில் மூடியின் நடுப்பகுதியில் துளையிடப்பட்டு, கொதிக்க வைத்து சுத்தப்படுத்தப்பட்ட குளுக்கோஸ் ட்ரிப் அதனுடன் சேர்த்து ஒட்டப்படுகிறது.

குளுக்கோஸ் ட்ரிப்பிலிருந்து கருவர்ணக்குழாய்கள் தொடர்கின்றன. மீன்வளர்ப்புத் தொட்டியில் பயன்படுத்தப்படும் குழாய்களும், திருக்கிகளுமே இதில் பயன்பாட்டிலுள்ளன. குழாய்கள் இறுதியில் வேரில் சென்று தொட்டு நிற்கின்றன. வேருக்கு மட்டும் நீர் பாய்ச்சிவிடும் எளிய முறை இது. குளுக்கோஸ் ட்ரிப் மூலம் நீரின் அளவைக் கூட்டிக் குறைத்து வைத்துக் கொள்ளலாம். காலச் சூழ்நிலைகளுக்கேற்ப மழைக்காலத்தில் குறைவாக, வெயில் காலத்தில் அதிகமாக வைத்து நீரைச் சேமித்துக் கொள்ளலாம். உயரம் அதிகமாக தேவைப்படுமேயானால் வீடுகளில் துணி காய உபயோகப்படுத்த உதவும் அலுமினிய கிளிப்களை இதில் பொருத்தி சரிபடுத்திக்கொள்ளலாம்.

காலை கல்லூரி ஆரம்பிக்கும் முன் மாணவர்கள் பாட்டில்களில் நீர் நிரப்பி வகுப்பறைகளுக்குச் சென்று விடுவார்கள். உதாரணமாக ஒரு லிட்டர் பாட்டிலின் அடிப்பகுதி வெட்டப்பட்டு 150 மில்லி குறைந்து அதாவது 850 மில்லி பாட்டிலில் நீர் விழுந்து முடிக்க 8 மணி நேரம் பிடிக்கிறது. பின் திரும்பவும் நீர் நிரப்பப்படுகிறது. நேர விரயம் இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. கல்லூரியைப் பின்பற்றி சில மாணவர்கள் வீட்டுத் தோட்டத்திலும் இம்முறையைச் செயல்படுத்தியிருப்பதாக பூரிப்புடன் கூறுகிறார்கள். ஈர்ப்பு ஓட்டம் (Gravity flow) எனும் புதிய, எளிய முறையை விரைவில் இக்கல்லூரியில் அறிமுகப்படுத்தப் போவதாக கூறி வருகிறார்கள். உயரமான இடங்களிலிருந்து நீரை குழாய்களில் விழச்செய்து ஒவ்வொரு செடிகளுக்கும் கிளைக்குழாய்கள் அமைத்து நீர் பாய்ச்சும் முறை என்று எளிமையாக இம்முறைக்கு விளக்கம் அளிக்கிறார்கள். நீரைச் சிக்கனமாகச் செடிகளுக்குச் செலவிட்டு பெருமழை பெற உதவுகிறது இந்த பயன்படா பாட்டில் மூலமான சொட்டு நீர் பாசனம்.

நன்றி - முகமது மதார் முகைதீன்  (மாணவ பத்திரிகையாளர்)