இந்தியாவில் குறைந்த விலை 3ஜி, 4ஜி நோக்கியா ஸ்மார்ட்போன்கள்..
ஒரு நேரத்தில் இந்தியாவில் மொபைல் போன்கள் சந்தையின் ஜாம்பவானாக திகழ்ந்த நோக்கியா அந்த அந்தஸ்தை 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு தென் கொரிய நிறுவனமான சாம்சங்கிடம் பறிகொடுத்துவி்ட்டது.
இப்போது, மைக்ரோசாஃப்ட் வசமிருக்கும் நோக்கியா இழந்த அந்தஸ்தை மீண்டும் பெற திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி வேகமாக இருந்தாலும், 3ஜி மற்றும் 4ஜி இண்டர்நெட் வசதி கொண்ட மொபைல் மற்றும் டேப்லட்களின் விலை அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் நோக்கியாவின் 4ஜி வசதி கொண்ட லூமியா 635 ஸ்மார்ட்போன் மாடல் மலிவாக கருதப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் அப்படி மலிவாக கிடைப்பதில்லை. 4ஜி நெட்வொர்க்கை நாடு முழுவதும் பரவச்செய்ய முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்கள் பலரும் முன்வராததற்கு காரணம் அந்த தொழில்நுட்பத்துடன் வெளிவரும் போன்கள் மக்கள் கைகளில் அதிகம் புழங்காததே. விலை அதிகமாக இருப்பதால் அதை எல்லோராலும் வாங்கிவிட முடிவதில்லை. எனினும், தற்போது 3ஜி போன்களின் விலை சற்று குறைந்துள்ளது எனலாம்.
இந்த நடைமுறை சிக்கல்களை புரிந்து கொண்ட நோக்கியா இந்தியாவில் குறைந்த விலை 3ஜி, 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா உள்ளிட்ட முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 4ஜி இண்டர்நெட் சேவையின் மூலம் தற்போது நாம் அதிகம் பயன்படுத்தும் 3ஜி-யை விட 10 முதல் 12 மடங்கு வரை அதிக இண்டர்நெட் வேகத்தை பெற முடியும்.
ஐ.டீ.சி.யின் அறிக்கையின்படி, இந்திய மொபைல் போன்களின் சந்தையில் சென்ற மாத நிலவரப்படி நோக்கியா 3-வது இடத்தில் உள்ளது. சாம்சங் முதலிடத்திலும், மைக்ரோமேக்ஸ் 2-வது இடத்திலும் இருக்கிறது. மீண்டும் இழந்த இடத்தை பிடிக்குமா நோக்கியா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.