Breaking News

ATM இல் ரூ. 200 எடுக்க போனவருக்கு ரூ. 26 லட்சம் வெளியே வந்தது! நேர்மையாக நடந்து கொண்ட முஸ்லீம் மாணவன் லத்தீப்!.

   

ஐதராபாத்;  இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் லத்தீப் என்னும் மாணவன் ஐதராபாத் எஸ்.ஆர். நகரில் வசிக்கிறார். நேற்று காலை லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் அரசு வங்கிக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவர் எடுக்க நினைத்த பணம் ரூ. 200 தான். இதற்காக தனது ஏ.டி.எம் கார்டை இயந்திரத்தில் செலுத்திய பின்னர், தனது ரகசிய குறியீட்டு எண்ணை அழுத்தினார். 

அப்போது திடீரென அந்த ஏடிஎம் இயந்திர பாகங்கள் திறந்து கொண்டு அந்த இயந்திரத்திலிருந்த ரூ. 26 லட்சம் வெளியே கொட்டியதாக தெரிகிறது.

இதை கண்டு அதிர்ந்த மாணவன் லத்தீப், உடனடியாக ஏ.டி.எம் மையத்திலிருந்த இருந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விவரமாக தெரிவித்துள்ளார். 

பின்னர் தனது நண்பனை பணத்திற்கு காவல் வைத்து விட்டு அருகிலிருந்த எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த வங்கி அதிகாரிகள், இயந்திரத்தை சரி செய்தனர். சம்பவம் நிகழ்ந்த ஏ.டி.எம் மையத்தில் கண்காணிப்பு கேமராவோ பாதுகாவலரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வங்கி அதிகாரிகளின் இந்த அலட்சியத்தை போலீஸார் கண்டித்தனர். அதேநேரம் மாணவர் லத்தீப்பின் நேர்மையையும், பணத்தை ஒப்படைக்க அவர் எடுத்த முயற்சிகளையும் போலீஸாரும், வங்கி அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.