செவ்வாய் கிரகத்தில் மங்கள்யானின் பணி..
பூமியை போலவே மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் செவ்வாய் கிரகத்தில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு காரணம் செவ்வாய் கிரகம் பூமியுடன் பல்வேறு விஷயங்களில் ஒத்துப்போகிறது. பூமியில் உள்ளது போலவே செவ்வாய் கிரகத்திலும் பாலைவனம், பனி துருவங்கள், எரிமலைகள் போன்றவை உள்ளன. இங்கு ஈர்ப்பு விசை பூமியின் புவிஈர்ப்பு விசையின் அளவில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. சூரியனில் இருந்து 22.79 கோடி மைல் தொலைவில் அமைந்துள்ள செவ்வாயில் தண்ணீர் மற்றும் கார்பன்டை ஆக்சைடு பனி உள்ளதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
மேலும் செவ்வாய் தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் 37 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. அதே போல சூரியனை சுற்றிவர 687 நாட்களை எடுத்துக் கொள்கிறது. செவ்வாய் கிரகத்தின் வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன், அர்கோன், ஆக்சிஜன், தண்ணீர் ஈரப்பதம், நைட்ரிக் ஆக்சைடு ஆகியவை இருப்பது ஆய்வில் தெரிந்துள்ளது. இருப்பினும் நீண்ட நாள் கேள்விக்குறியாக இருந்துவருவது செவ்வாயில் மனிதனின் வாழ்வாதாரங்கள் நிரம்பியுள்ளதா என்பதே. தற்போது இவற்றை ஆய்வு செய்வதற்காகவே மங்கள்யான் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்.