பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்..
பீகாரில் பெண்களுக்கு மிஸ்டு கால் அடிக்கடி கொடுப்பவர்கள் ஜெயிலில் அடைக்கும் விதமாக விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
பீகார் மாநில சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ஜெனரல்(IG) (நலிவுற்ற பிரிவு) அரவிந்த் பாண்டே நேற்று அனைத்து மாவட்ட சுப்பிரண்ட் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ரெயில்வே போலீசுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதில் பெண்களுக்கு அடிக்கடி மிஸ்டு கால் கொடுக்கப்படுவதை மிகவும் திவிரமாக எடுத்துக் கொண்டு விசாரணை மற்றும் நடவடிக்கையை எடுக்க உறுதி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. “ பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்தால் முக்கிய விவகாரமாக எடுத்துக் கொள்ளப்படும். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும் மற்றும் அவர்களின் அமைதியை சீர்குலைக்கும். இத்தகைய குற்றங்களை இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 354D (i) மற்றும் (ii) கீழ் கண்காணிக்க முடிவு எடுத்துள்ளோம்.” என்று அரவிந்த் பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும், பாண்டே பேசுகையில் ஒன்று அல்லது இரண்டு முறை மிஸ்டு கால் வந்தால் அதனை நிராகரித்துவிடுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் மீண்டும் பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் அதனை கண்காணிக்க கேட்டுக் கொண்டுள்ளோம். என்று கூறியுள்ளார். மிஸ்டு கால் கொடுத்து தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பீகாரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக மகளிர் காவல் நிலையங்களில் இரண்டு நாட்கள் முகாம்கள் நடைபெற்றது. அப்போது இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் முகாம்களில் கலந்து கொண்டனர்.