அழகா இருந்தாதப்பா ?
கேரளாவைச் சேர்ந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரியான மெரின் ஜோசப் சென்ற வாரம் சமூக வலைதளங்களில் அதிகம் வதைபட்டார். காரணம் அழகு!
டெல்லியில் கல்லூரிப் படிப்பை முடித்து தேர்வில் முதல் முயற்சியில் ஐ.பி.எஸ் தேர்வானவர் மெரின் ஜோசப். கடந்த வாரம் இவருடைய ஃபேஸ்புக் பேஜிலிருந்த படங்களுக்கு அதிக லைக்குகளும் கமென்ட்களும் குவிந்தன. சிலர் வரம்பு மீறி, ‘இப்படி ஒரு அதிகாரினா நான் டெய்லி குற்றம் செஞ்சு உங்களிடம் அடி வாங்குவேன்’, ‘சீக்கிரம் என்னை அரெஸ்ட் செஞ்சு அடிங்க மேடம்’, என்றெல்லாம் கமென்ட் போட ஆரம்பித்து விட்டார்கள். ட்ரெயினிங்கில் இருந்ததால், சோஷியல் மீடியாக்களை மெரின் ஜோசப் கவனிக்காமல் விட்டு விட்டார். வந்தது வினை. ‘கொச்சி பழைய கொச்சியல்லா’ என்ற ஃபேஸ்புக் குரூப்,
‘‘Merin Joseph IPS – How many likes for our new ACP of Kochi?’, ‘புதிதாக கொச்சிக்கு அசிஸ்டென்ட் கமிஷனராக வந்திருக்கும் மெரின் ஜோசப் ஐ.பி.எஸ்-க்கு லைக் செய்யுங்கள்’ என ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் ஸ்டேட்டஸ்களாகப் போட்டு லைக்ஸ் அள்ளினார்கள். 500 பேருக்கும் மேல் அடுத்த சிலமணி நேரங்களில் இதை ஷேர் செய்ததோடு கிட்டத்தட்ட 12,000 பேர் லைக் செய்திருந்தார்கள். சிலர் ஏகத்துக்கும் உணர்ச்சி வசப்பட்டு, ‘இனிமேல் காவல் துறை உயர் அதிகாரிகள் பொறுப்பாய் வேலை செய்வார்கள்’ என்றெல்லாம் கமென்ட் போட, கேரள காவல் துறை விழித்துக்கொண்டது.
கொச்சியின் போலீஸ் கமிஷனர் கே.ஜி.தாமஸ் பிரஸ் மீட் வைத்துப் பேசினார். ‘கொச்சிக்கு அசிஸ்டென்ட் கமிஷனராக மெரின் ஜோசப் என்ற அதிகாரி நியமிக்கப்படவில்லை. அவர் படங்களை ஷேர் செய்வது தவறானது. இதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்றார்.
அதோடு இணையத்தில் அந்தப் பொய்யான தகவலைப் பரப்புரை செய்த நபரை ஐ.பி அட்ரஸை வைத்துக் கண்டுபிடித்து கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள். விஷயத் தைத் தாமதமாகக் கேள்விப்பட்ட மெரின் தன் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை டி-ஆக்டிவேட் செய்தார். தன் ட்விட்டர் அக்கவுன்ட்டில்,”நான் இன்னும் பயிற்சி யில்தான் இருக்கிறேன். எனக்கு ஜனவரி மாதம்தான் போஸ்ட்டிங் போடுவார்கள். அதுவரை இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்பாதீர்கள்” என்று ட்வீட் செய்திருந்தார்.
ஹைதரபாத்தில் பயிற்சியில் இருக்கும் மெரினிடம் பேசியபோது, ‘‘இதுபோன்ற செய்திகளுக்கு மீடியாக்களும் முக்கியத் துவம் கொடுக்காமல் இருந்தால் நல்லது. கேரளாவின் மூன்றாவது பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமிதமாக இருக்கிறது. ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்ட நான்கு நபர்களில் நானும் ஒருவர். அதை இத்தனை பேர் ஷேர் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். காவல் துறையில் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. அதில் மட்டுமே என் கவனம் இருக்கும்’’ என்றார்.
இவர் பெயரில் இப்போதும் பல ஃபேஸ்புக் பக்கங்கள் ஆரம்பித்து இன்னும் உக்கிரமாக அவர் அழகைப் புகழ்ந்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு சிலர் மட்டும் கேரளத்தின் கிரண்பேடி என்று பேஜ் ஆரம்பித்து புகழ் பரப்பி வருகிறார்கள்.
திருந்துங்கப்பா..!