Breaking News

பெங்களூரில் இருந்து விமானத்தில் வந்த இதயம்: சென்னை நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இங்குள்ள நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. 

                          

கர்நாடக மாநில எல்லையில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் கடந்த 1-ந் தேதி ஓசூர் மெயின் ரோட்டில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் கெங்கேரியில் உள்ள பி.ஜி.எஸ். குளோபல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் அவரது உடல்நிலை மோசமாகி மூளைச்சாவு அடைந்தார். 

இந்த தகவல் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட அவர்கள் கதறி அழுதனர். ஆனால் பெண்ணின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயல் இழக்கவில்லை. அதை பெண்ணின் குடும்பத்தாரிடம் தெரிவித்த டாக்டர்கள் அந்த உறுப்புகளை பிறருக்கு தானமாக வழங்கலாம் என்றும் கூறினார்கள். 

அதை கேட்ட அந்த பெண்ணின் குடும்பத்தார் தாங்கள் மிகுந்த சோகத்தில் இருந்தபோதிலும், பிறருக்கு வாழ்வு கிடைக்குமே என்று கருதி அந்த பெண்ணின் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டனர். 


உடனடியாக, அவரது உடலில் உள்ள உறுப்புகளை தானம் செய்வதற்கான நோயாளிகளை டாக்டர்கள் தேர்வு செய்தனர். இதில் அவரது 2 கண்கள், 2 சிறு நீரகங்களை பெங்களூரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இதயத்தை தானம் பெறும் நோயாளிகள் பெங்களூரில் இல்லாததால், தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் இதய நோயாளியை தேர்வு செய்ய முடிவு செய்தனர். 

சென்னை அடையாறில் உள்ள போர்டீஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மும்பையை சேர்ந்த 40 வயது ஆணுக்கு இதயத்தை பொருத்துவதாக முடிவு செய்யப்பட்டு, மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயத்தை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். பெண்ணின் உடலில் இருந்த இதயத்தை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். 

இதயம் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட பிறகு 6 மணி நேரம் வரை மட்டுமே அதன் செயல்பாடு இருக்கும் என்பதால், அதை நேற்று மாலை 3.30 மணி விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பாதுகாப்பான பெட்டியில் வைக்கப்பட்ட இதயம், குளோபல் ஆஸ்பத்திரி ஆம்புலன்சு வேனில் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்னொரு ஆம்புலன்சு வேனில் போர்டிஸ் மலர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சென்றனர். 
                                   
                                                   
கெங்கேரி ஆஸ்பத்திரியில் இருந்து சர்வதேச விமான நிலையம் வரை 45 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த தூரத்தை சாதாரணமாக போக்குவரத்து நெரிசலில் கடந்து செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 2 மணி நேரம் ஆகும். அதிலும் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூர் ரோட்டில் விரைவாக செல்ல வேண்டும் என்றால், அதற்கு போக்குவரத்து போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம் என்று உணர்ந்திருந்த டாக்டர்கள் முன்னதாகவே இந்த தகவலை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு தெரிவித்தனர். 

அதன்பேரில் இதயம் எடுத்து செல்லப்பட்ட ஆம்புலன்சு வேன் சிக்னல்களில் நிற்காமல் விமான நிலையத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னால் போக்குவரத்து போலீசார் வழியில் எங்கும் பச்சை சிக்னல் ஏற்படுத்தும்படி வயர்லஸ் மூலம் கூறியபடியே செல்ல, அதை பின்தொடர்ந்து 2 ஆம்புலன்சு வேன்களும் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் நோக்கி விரைந்தன. 

சுமார் 62 நிமிடத்தில் 45 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அந்த ஆம்புலன்சு வேன்கள் விமான நிலையத்தை அடைந்தன. பின்னர் விமானத்தில் மதியம் 3.22 மணிக்கு இதயம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. 

வழக்கமாக பெங்களூரில் இருந்து ஏர்-இந்திய விமானம் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேரும். ஆனால் இதயம் கொண்டு வரவேண்டியது இருந்ததால் 8 நிமிடங்கள் முன்னதாக மாலை 3.22 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தை விமானி பிரேம்சங்கர் இயக்கினார். இதில் 85 பயணிகளும் பயணம் செய்தனர். மாலை 4.22 மணிக்கு சென்னை வரவேண்டிய விமானம், 6 நிமிடங்களுக்கு முன்னதாக மாலை 4.16 மணிக்கு தரை இறங்கியது. 

ஓடுபாதையில் வந்து நின்று கதவுகள் திறக்க குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் ஆகும். ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு 4 நிமிடங்களில் அதாவது 4.20 மணிக்கு விமானத்தை நிறுத்தி கதவை திறக்கச் செய்தார். டாக்டர்கள் பாவுலின் கிருஷ்ணமுரளி, ராஜீ, சவுத்திரி ஆகியோர் பாதுகாப்புடன் இதயத்தை கொண்டு வந்தனர். முதலில் இதயத்துடன் இவர்கள் விமானத்தில் இருந்து கீழே இறங்கினார்கள். 

இதயத்தை கொண்டு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ், விமான நிலையத்தின் உள்ளே ஓடுபாதைக்கு அருகில் அனுமதிக்கப்பட்ட விவரம் தெரியாமல் இதயத்துடன் வெளியே செல்ல முற்பட்டனர். விமான நிலையத்தின் உள்ளே ஆம்புலன்சு நிறுத்தப்பட்டு இருக்கும் தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருக்கும் பகுதிக்கே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு இந்த ஆம்புலன்ஸ் அங்கு இருந்து புறப்பட்டு அடையார் மலர் ஆஸ்பத்திரியை நோக்கி புறப்பட்டது. அங்கு இருந்து மலர் ஆஸ்பத்திரி 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தூரத்தை 7 நிமிடத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர் இதயத்தை 4.37 மணிக்கு கொண்டு வந்தார். 

                                               

உடனடியாக, இதயம் மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்டு, ஏற்கனவே 3.45 மணியளவில் இருந்து ஆபரேஷன் தியேட்டரில் தயார் நிலையில் இருந்த நோயாளிக்கு இதயத்தை பொருத்துவதற்கான ஆபரேஷன் தொடங்கப்பட்டது. மாலை 4.38 மணிக்கு தொடங்கிய இந்த ஆபரேஷன் இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது. 

வெற்றிகரமாக நடைபெற்ற ஆபரேஷன் மூலம் தமிழ்நாட்டு இளம் பெண்ணின் இதயம் மும்பை ஆணின் உடலில் பொருத்தப்பட்டு தனது இயக்கத்தை இடைவிடாமல் தொடர்ந்தது. போர்டீஸ் மலர் மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர் டாக்டர் சுரேஷ் ராவ் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த ஆபரேஷனை செய்து முடித்தனர்.