Breaking News

தமிழகம் முழுவதும் இன்று பந்த்..



சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும், இன்று அறிவிக்கப்படாத, 'பந்த்' நடத்த, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. பல்வேறு சங்கங்களும், கடைஅடைப்பு, வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், பஸ், ஆட்டோக்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா கைது, சிறை வைப்பு சம்பவத்தால், அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்; பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறிவிக்கப்படாத பந்த்:
இந்த நிலையில், ஆதரவு கட்சிகள், சங்கங்களையும், அ.தி.மு.க., களத்தில் இறக்கியுள்ளது. அவை, ஜெயலலிதா சிறை வைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று, 'பந்த்' நடத்த திட்டமிட்டு உள்ளன. 'இதற்கு, வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்' என, ஆளுங்கட்சி தரப்பில் அழுத்தம் தரப்பட்டு வருகிறது.இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் இன்று அறிவிக்கப்படாத, 'பந்த்' நடக்கிறது. மதுரை, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில், வணிகர் சங்கங்கள், கடையடைப்பை அறிவித்து உள்ளன. பெரும்பாலான மாவட்டங்களிலும், கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

நலத்திட்டங்கள்:
வணிக சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஜெயலலிதாவுக்கு தண்டனை குறித்த, நீதி சார்ந்த விஷயங்களை நாம் கண்டிக்க முடியாது. முதல்வராக இருந்த ஜெயலலிதா, வணிகர்களுக்கான பல நலத் திட்டங்களை செயல்படுத்தினார். தற்போது அவருக்கு ஏற்பட்டு உள்ள சிரமத்தில் பங்கெடுக்கும் வகையில், கடையடைப்பு நடத்துகிறோம்' என்றார்.

'ஆயுத பூஜை நேரம் என்பதால், கடைகளைஅடைக்க யாரும் விரும்பவில்லை. ஆளுங்கட்சி அழுத்தம் தரும் நிலையில், கடையடைப்பு தவிர்க்க முடியவில்லை' எனவும், வணிகர்கள் கூறுகின்றனர்.

மதுரையில் கடையடைப்பு குறித்து, மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா கூறுகையில், ''வியாபாரிகளும், வணிகர் சங்கங்களும் தாங்களாக முன்வந்து இம்முடிவை எடுத்துள்ளனர்,'' என்றார்.சென்னையில், கடையடைப்பு எதையும் வணிகர் சங்கங்கள் அறிவிக்கவில்லை. ஆனால், பல்வேறு மீனவர் அமைப்புகளும் வேலை நிறுத்தம், உண்ணாவிரதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

பஸ், ஆட்டோக்கள் ஓடுமா?
அறிவிக்கப்படாத, 'பந்த்' காரணமாக, தமிழகத்தில் பஸ், ஆட்டோக்கள் ஓடுமா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே, தீர்ப்பு வந்த நாள் முதல், குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. அவையும் நிறுத்தப்பட்டால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,'நாளை (இன்று) வழக்கம் போல் பஸ்கள் இயங்கும். வணிகர்கள் கடை அடைப்பால் பஸ்கள் இயக்கத்தில் சிக்கல் ஏற்படாது' என்றார். ஆனாலும், சென்னை தவிர பிற மாவட்டங்களில், பஸ் போக்குவரத்து பாதிக்கும் சூழல் உள்ளது.

கல்லுாரிகள் இயங்கும் :
பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சிக்கல் இல்லை. அரசு, தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், விடுமுறை அறிவிக்கப் படவில்லை. தேர்வுகள் நடப்பதால், வழக்கம் போல் நடக்கும் என, கூறப்படுகிறது. மகளிர் கல்லுாரி பேராசிரியர்கள் கூறுகையில், 'நாளை (இன்று) அறிவிக்கப்படாத, 'பந்த்' நடந்தால், மாணவியரின் பாதுகாப்பு கருதி, வகுப்புகளை ரத்து செய்வோம்' என்றனர்.

தியேட்டர்கள் மூடல்; படப்பிடிப்புகள் ரத்து :
ஜெயலலிதாவுக்கு, நீதின்றம் விதித்த தீர்ப்புக்கு, வருத்தத்தையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் வகையில், திரையுலக கூட்டமைப்புகளின் சார்பில், சென்னை, சேப்பாக்கத்தில், இன்று உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இதற்கு, போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும், தியேட்டர்களில், காலை, மதியம் காட்சிகள் ரத்தாகின்றன. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில், சினிமா மற்றும் 'டிவி' படப்பிடிப்புகள் உட்பட, சினிமா சார்ந்த எல்லா பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எந்தெந்த அமைப்புகள்?

*மதுரை மாவட்ட வணிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கங்களின்  கூட்டமைப்பு (38 சங்கங்கள் ஒன்றிணைந்தது)
*தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்
*கடலுார் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம்
*விழுப்புரம் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
*சென்னை மீனவ ஐக்கிய பஞ்சாயத்து சபை
*விசைப்படகு மீனவர் சங்கங்கள்
*திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட நடிகர் சங்கம், திரைப்பட    இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி),  சென்னை தியேட்டர் 
 உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம்,  தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் சங்கம் மற்றும் தமிழ்நாடு  திரையுலக கூட்டமைப்பு.