'ஆர்க்குட்' - இப்படம் இன்றே கடைசி!
ஞாபகம் இருக்கா மக்களே... ஆர்க்குட்டை? பத்து வருஷத்துக்கு முன்னாடி 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி கூகுளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்க்குட்டுக்கு இன்னிக்கு மூடுவிழா!
துருக்கி நாட்டைச் சேர்ந்த ஆர்க்குட் பய்யோக்கோக்டென் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயர் கண்டுபிடிச்ச இந்த சமூக வலைதளம் நம்ம வாழ்க்கைல உண்டாக்குன பாதிப்பு கொஞ்சமா நஞ்சமா? 2006ல இந்தியாவுல உச்சத்துல இருந்த ஆர்க்குட் நம்ம வாழ்க்கையோட எப்படியெல்லாம் பின்னிப்பிணைஞ்சு இருந்துச்சுன்னு கொஞ்சம் கொசுவர்த்தியை சுத்தவிட்டு பார்ப்போமா?
* Fans, Friends, Scraps, Testimonials, Communities - இந்த வார்த்தைகள்லாம் தானே அப்போ நம்மளோட மைண்ட் பூரா ஆக்கிரமிச்சுக் கிடக்கும்.
* ஒரு நாளைக்கு 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒவ்வொரு பொண்ணுகிட்டயும் ஸ்க்ராப் பண்ணினதை ஊரே பார்த்து கைகொட்டி சிரிச்சுச்சே அதை எல்லாம் மறக்க முடியுமா?
* மிரட்டியே நல்லவரு வல்லவருனு நம்மக்கிட்ட சிக்கின அடிமை எவனையாச்சும் ‘டெஸ்ட்டிமோனியல்’ எழுத வைப்போமே? அதைப் பார்த்து எவளாச்சும் நமக்கு ஃபேனாகி ஸ்க்ராப் பண்ணுவானுதானே!
* ‘உன் நண்பனைக் காட்டு... நீ யாரென்று சொல்லுகிறேன்!’ -இது பழைய பழமொழி. ‘உன் கம்யூனிட்டியை பார்த்தேன்... நீ மோசமான பேமானி!’ -இதானே அன்றைய காலகட்ட ஆர்க்குட் புதுமொழி!
* இன்னிக்கு இன்பாக்ஸ்ல போய் வழிஞ்சாலும், வெளியே தெரியாத ஃபேஸ்புக் சாட்டிங் ரகசியக் காப்பு வசதிகள் எதுவும் அன்னிக்கு ஆர்க்குட்ல இல்லாததால, ‘ஸ்க்ராப்’ல போய் முரட்டுத்தனமா வழிஞ்சவய்ங்களோட அத்தனை ஸ்க்ராப்களையும் ஒவ்வொரு புரொபைலா போய் படிச்சு, செமையாய் டைம் பாஸ் பண்ணினோமே...ஞாபகம் இருக்கா?
* கடவுள் பாதி மிருகம் பாதியா பூராப்பயலுகளும் ‘இறையன்பு ஐ.ஏ.எஸ் கம்யூனிட்டி’லயும் இருப்பாய்ங்கே ‘ஹாட் மல்லு ஆன்ட்டீஸ் கம்யூனிட்டி’லயும் இருப்பாய்ங்கேளே... ஞாபகம் இருக்கா ஜி?
* அந்த இளம் நீல பக்கங்களில் பிங்க் கலர் ‘ஆர்க்குட்’ என்ற வார்த்தை எவ்வளவு அழகு! தெறிக்க வைக்கிற கலர்கள்ல லே-அவுட்டை அடிக்கடி மாத்தி வெச்சு கெத்துக் காட்டுவோமே ஞாபகம் இருக்கா?
* பலபேரு நம்மளோட பழைய ஸ்கூல்மேட்களை இந்த கம்யூனிட்டிகள்லதானே கண்டடைஞ்சோம்? எத்தனை எத்தனை டவுசர்கால நண்பர்களை இதுல மீட்டெடுத்தோம்!
* ‘இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ... உன்னை விட Fans, Friends, Scraps அதிகமா சம்பாதிச்சி நீ எப்படி பில்ட்-அப் கொடுக்கறியோ அதே மாதிரி நானும் கொடுக்கல... என் பேரு ஆர்க்குட் வெறியன் இல்லடா!’னு பஞ்ச் பேசுனோமே நாம்!
* 'மாற்றம் என்ற சொல்லே மாறாதது!' நாளைக்கு இதே நிலைமை ஃபேஸ்புக்குக்கும் வரலாம். அப்போ எப்படில்லாம் இப்படி மொக்கையா ஸ்டேட்டஸ் போடுவோம்னு இப்பவே யோசிச்சு வெச்சுக்கோங்க மக்களே!
* குட் பை ஆர்க்குட்!