தகவல் தொழில் நுட்பமும் தமிழும்..
கால வளர்ச்சிக்கு தகுந்தவாறு எந்த ஒரு மொழி தன்னைப் புதுமைக்குள் உட்படுத்திக் கொள்கிறதோ அந்த மொழிக்கு அழிவில்லை. அந்த வகையில் தமிழ் மொழி வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஓலைச்சுவடிகளாகவும், கல்வெட்டு, செப்புப் பட்டையங்களாகவும் வளர்ந்த தமிழ் மொழியினை இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்தின் வழியாக உலகம் போற்றும் மொழியாக்கி விட்டனர். இன்றைய சூழலில் உலக வலைப் பின்னலில்
(www. world wide web) தம்மை பிணைத்துக் கொள்ளாதவர் எவரும் இல்லை. உலகத்தின் எந்த மூலைக்கும் மின்னஞ்சல் (e.mail) மூலம் தொடர்பு கொள்ள முடியும்.
தமிழ் மொழியை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்தவர், புலம் பெயர்ந்த தமிழரான சிங்கப்பூரை சேர்ந்த திரு.நா.கோவிந்தசாமி. இவர் தான் தமிழ் மொழியினை உலக வலைப் பின்னலில் முதலில் அறிமுகப்படுத்தியவர். இவரைப் பின் தொடர்ந்து அதே நாட்டைச் சேர்ந்த க.நந்தகுமார், வை.பழனிவேலு, முகமது இஸ்மாயில் ஆகியோர் கணினியில் தமிழைக் கொண்டு வருவதற்குப் பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர்.
1983 முதல் 1987 ஆம் ஆண்டு வரையிலும் இவர்கள் செய்த பெரும் முயற்சிகளால் கணினிக்குள் தமிழ் எழுத்துக்களைக் கொண்டுவர முடிந்தது. இந்திய மொழிகளில் முதலில் இணையத்தில் நுழைந்த மொழி தமிழ்.
தகவல் தொழில் நுட்பத்தினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் எந்தத் துறையும் தனது முன்னேற்றத்தினை உறுதி செய்து கொள்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உலக தமிழர்களை இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படுகின்றது. தகவல் தொழில் நுட்பத்தின் ஆணிவேர் இணையம். இணையம் என்பதற்குக் கணினிகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் என்று பொருள் கூறுகிறது பால்ஸ் தமிழ் மின் அகராதி.
கடல் கடந்து வாழும் தமிழ்ச் சமூகத்தினர் தம் உறவுகளுடன் மொழியால், இனத்தால், பண்பாட்டால், தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்கத், தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி அறிவை வழங்க வேண்டிய சூழலில் இணையம் அதற்கு பேரூதவி செய்கிறது. உலக செம்மொழிகளில் இணையத்தை அதிகமாக பயன்படுத்தி, தரவுகளை பெற்றுவரும் முதல் மொழி தமிழ் தான்.
இத்தன்மையிலான வளர்ச்சிப் பாதையில் தமிழக அரசுத் துறை நிறுவனங்களான தமிழ் வளர்ச்சித்துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மிக சிறப்பான பணியினை மேற்கொண்டு வருகின்றன. இன்றைய தொழில்நுட்பத்தில் கூகுள் தேடல் மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை முக்கியமானவை.
இன்றைய இளைஞர்களின் நட்புக்கு, பொழுது போக்குக்கு என்று இணையம் பல வகையில் பயன்பட்டாலும் கற்றல் என்பதற்காக இதனை பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் நல்லதொரு சாதனைகளை படைக்க முடியும்.
கற்றல் விஷயத்தில் இன்றைக்கிருக்கும் இ- டிக்ஷ்னரி, இ-புக், இ- லைப்ரரி, இ- டிரான்ஸ்லேஷன், இ- லியர்னிங், வீடியோ கான்ப்ரன்ஸ், லேங்குவேஜ் லேப் ஆகியவை இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனளிக்கிறது.
அவற்றை விரிவாக தெரிந்து கொள்ள... மின்னகராதி (e dictionary) கற்பித்தலுக்கு துணையாக செயல்படும் மற்றுமொரு கருவியாக அமைவது மின்னகராதி ஆகும். இது வெளிநாடு வாழ் தமிழர், புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். தங்களுக்கு நன்கு பரிச்சயமான மொழியில் இருக்கும் சொற்களின் பொருளினைத் தமிழ் மொழியில் அறியும் வாய்ப்பினை இது ஏற்படுத்திக் கொடுக்கின்றது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தங்கள் கற்பித்தலையும் கற்றலையும் பொருளுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ள இக்கருவி பயன்படுகின்றது.
www.agarathi.com
www.ta.wikipedia.org/tamil
www.tamildict.com
www.thozhilnutpam.com
www.ta.wiktionary.org