Breaking News

'வாட்ஸ் அப்' விபரீதம்!

                                                     

னிதகுலம் முன்னேறுவதற்கும், பல்வேறு தகவல்கள் உலகத்தில் உள்ள அனைவருக்கும் விரைவில் போய்ச் சேரவும்தான் சமூக வலைத்தளங்கள் தோன்றின.
கூகுள், ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர் வரிசையில் தற்போது, மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் முக்கியப் பங்கு வகிக்கிறது. மற்ற சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் அதிகளவில் நண்பர்களை இணைப்பதில் “வாட்ஸ் அப்“ முன்னணியில் இருக்கிறது.
வாட்ஸ் அப்பின் திடீர் அசுர வளர்ச்சியைக் கண்டு அசந்துபோன ஃபேஸ்புக் வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது தெரிந்த தகவல். ஆனால், பல்வேறு வசதிகளைப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், வழக்கம் போலப் பெண்களை அச்சுறுத்தும் காரியங்கள் வாட்ஸ் அப் வழியாகத் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

‘முகம் தெரிந்த நண்பர்களை மட்டுமே இணைக்கும் தளம்’ என வாட்ஸ் அப் கருதப்பட்டதால்தான் பெண்கள் வட்டத்திலும் வாட்ஸ் அப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் வாட்ஸ் அப்பிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது சமீபகாலமாக நிரூபணம் ஆகிவருகின்றன. மற்ற வலைத்தளங்களைக் காட்டிலும் வாட்ஸ் அப்பில் தகவல் எளிதில் பரிமாறப்படுவதாலும், யார் தகவலை உருவாக்கினார்கள், எப்படிப் பரவியது என்பது குறித்து உடனடியாகப் போலீசாரால் கூடக் கண்டுபிடிக்க முடியாது என்பதால் பல்வேறு தவறான தகவல்கள் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றன.

ஒரு பெண்ணின் புகைப்படத்துடன், ஆடியோ ஒன்றும் வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. அந்த ஆடியோவில் ஒருவர், “நான் ஒரு பெண்ணின் புகைப்படத்தை உங்களுக்குப் பகிர்ந்துள்ளேன். அந்தப் பெண் சென்னையில் பகல் வேளையில் தனியாகப் பெண்கள் இருக்கும் பல வீடுகளில் காஸ் இணைப்புப் பரிசோதனை செய்வதாக வீட்டில் சென்று காஸ் இணைப்பை பரிசோதனை செய்தபின் கைகழுவ வேண்டும் என்பார். அவருக்கு உதவும் போது அவர் தண்ணீரில் கைகளைக் கழுவிய பின்னர், குளோரோபார்ம் திரவத்தில் நனைக்கப்பட்ட கர்சீப் கொண்டு வீட்டில் இருக்கும் பெண்ணை மயக்கமடையச் செய்து வீட்டுக்குள் இருக்கும் நகைகளைத் திருடி சென்றுவிடுவார். இது போலப் பல வீடுகளிலும் கைவரிசை காட்டியிருக்கிறார். எனது போலீஸ் நண்பர் இந்தத் தகவலை எனக்குச் சொன்னார். நான் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். இந்தப் போட்டோ மற்றும் ஆடியோவை உங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அனுப்புங்கள். பெண்களுக்கு விழிப்புணர்வு குறைவு நாம் தான் அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்’’ என நீளுகிறது இந்த ஆடியோ.

இது உண்மையா, பொய்யா... எனத் தெரியாது பலரும் தங்களது நண்பர்களுக்கு இந்தத் தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். இந்தத் தகவல் உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம். ஆனால், இந்தச் சம்பவம் பல பாடங்களை நமக்குக் கற்று கொடுத்து இருக்கிறது. அது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதே.

ஏன் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை? 

வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக வலைதளங்களில், ஒரு பெண் தனது புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார் என வைத்துகொள்ளுங்கள். அந்தப் பெண்ணுக்கு விரும்பத்தகாதவர், அந்தப் பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவரது போட்டோவை இணைத்து சில ஆடியோ, வீடியோக்களை உருவாக்கி அதனை எளிதில் வாட்ஸ் அப்பில் பரப்ப முடியும். இதனால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

பெண்கள் என்ன செய்ய வேண்டும்?


பெண்கள் எந்தவித சமூக வலைதளங்களில் இருந்தாலும் முடிந்தவரை தங்களின் புகைப்படங்களைப் பதிவேற்றக் கூடாது. ‘‘வாட்ஸ் அப்பில், நான் எனக்குத் தெரிந்தவர்களுடன் மட்டுமே தொடர்பில் இருக்கிறேன். எப்படி எனக்கு ஆபத்து வரும்“ என நீங்கள் நினைக்கலாம். வாட்ஸ் அப்பில் உங்களுக்குத் தெரிந்தவர்களை மட்டுமே நீங்கள் இணைத்தாலும் உங்கள் கைப்பேசி நம்பரை வைத்திருக்கும் எவரும் உங்களைக் கண்காணிக்க முடியும். நீங்கள் என்ன படத்தை ப்ரொபைல் படமாக வைத்திருக்கிறீர்கள், என்னென்ன ஸ்டேட்டஸ் இடுகிறீர்கள், எப்போதெல்லாம் வாட்ஸ் அப் வருகிறீர்கள் என்பதன் மூலமாக உங்களை அவர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இவற்றில் இருந்து தப்ப ஒரே வழி நீங்கள், உங்களது வாட்ஸ் அப் செட்டிங்குகளை மாற்ற வேண்டும். உங்களது கைப்பேசியில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே, உங்களது ப்ரோபைல் பற்றிய தகவல் தெரியவோ, அல்லது யாருக்குமே உங்களது ப்ரொபைல் பற்றிய தகவல் தெரியாமல் இருக்கவோ அதற்கான ஆப்ஷன்களை வாட்ஸ் அப் தருகிறது அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

முடிந்தவரையில் உங்களது புகைப்படம் மற்றும் நீங்கள் எந்தெந்த நேரங்களில் வாட்ஸ் அப் வருகிறீர்கள் என்பதை முற்றிலுமாக அனைவரிடம் இருந்தும் மறைப்பது நலம். வாட்ஸ் அப் குழுக்களில் இணைவதில் நிறையப் பிரச்னைகள் உள்ளது. எனவே உங்களுக்குத் தெரியாத நபர் இணையும் வாய்ப்பு உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து விலகி விடுங்கள். உங்களுக்குத் தெரிந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருக்கக்கூடிய குழுக்களில் மட்டுமே இணையுங்கள். ஏனெனில், வாட்ஸ் அப் குழு மூலமாக உங்களைப் பற்றிய விவரங்கள், உங்களது தொலைபேசி எண் சம்பந்தமில்லாத நபருக்கு சென்றடையும் வாய்ப்பும் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஒருதலைக்காதலில் பெண்களைப் பழிவாங்க அந்தப் பெண்ணை அவமானப்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே யாரிடமும் உங்களது புகைப்படத்தைக் கண்டிப்பாகத் தராதீர்கள். வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை உங்களுக்கு அளிப்பதாகக் கூறும் இணையதளங்களை நம்பி உங்களது புகைப்படங்களைக் கண்டிப்பாக இணைக்காதீர்கள்.

வாட்ஸ் அப்பில் இருப்பவர்கள் கவனத்துக்கு:
வாட்ஸ் அப்பில் தினமும் பல லட்சம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. உங்களுக்கு வரும் ஒரு தகவல் உண்மையானது என 100 சதவிகிதம் தெரிந்தாலோ அல்லது பிரபல நிறுவனங்களின் இணையதளங்களில் உறுதியிட்டுக் கூறப்படும் தகவல்களை மட்டும் பரிமாறுங்கள்.
சமீபத்தில் கேன்சர் நோய்க்கான மருந்து அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஒன்றில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானதும் அந்தத் தகவலில் 100 சதவிகிதம் உண்மையில்லை என அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மறுத்ததையும், பிரபல நடிகர், ஜனாதிபதி ஆகியோர் இறந்ததாகப் பரவிய தவறான தகவல்களையும் நினைவில் நிறுத்துங்கள்.
எனவே, உங்களுக்குச் சரியான தகவல் எனத் தெரியாத பட்சத்தில் தகவல்களைப் பரப்பாதீர்கள்.
சமூக வலைத்தளங்கள் மனிதர்களை இணைக்க உருவாக்கப்பட்டவையே தவிர, சமூக விரோதிகள் தவறாகப் பயன்படுத்த இடம் கொடுத்துவிடக்கூடாது.