பல்லாவரம் அருகே ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு
பல்லாவரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவன பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மற்றும் கார் மீது மோதி கவிழ்ந்தது. இதில், டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.மறைமலைநகரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்கின்றனர். இவர்களை வீட்டில் இருந்து அழைத்து வரவும், கொண்டு செல்லவும் கம்பெனி நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, நேற்று மாலை வேலை முடிந்து ஊழியர்கள் 50 பேரை ஏற்றி கொண்டு, கம்பெனியில் இருந்து ஒரு பஸ் புறப்பட்டது. டிரைவர் பிரசன்னா (25) பஸ்சை ஓட்டி சென்றார். வழியில் ஆங்காங்கே ஊழியர்களை இறக்கிவிட்டு, கடைசியாக நீலங்கரை நோக்கி பஸ் சென்றது. பல்லாவரம் சிக்னல் அருகே பஸ் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மற்றும் அருகே சென்ற சென்ற கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், பஸ்சில் இருந்த டிரைவர் பிரசன்னா, ஊழியர்கள் சுசித்ரா, சிவராமகிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக, ஊழியர்கள் 2 பேரையும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
டிரைவர் பிரசன்னாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டையில் இருந்து பல்லாவரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கிரேன் மூலம் கவிழ்ந்த பஸ் மற்றும் காரை அப்புறப்படுத்தினர். புகாரின்பேரில் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.