Breaking News

வளைகுடா நாடுகளுக்கு ஒருங்கிணைந்த விசா திட்டம்

 

ஒருங்கிணைந்த விசா என்ற நடைமுறையை பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், அரேபியா, ஐக்கிய அரபு உள்ளிட்ட வளைகுடா நாடுகளை உள்ளடக்கி இந்த ஒருங்கினைந்த விசா திட்டத்தை அமல்படுத்த  சம்பந்தப்பட்ட நாடுகள் திட்டமிட்டு வருவதாக  குவைத் நாட்டின் வர்த்தகதுறை உயர் அதிகாரி சமீரா அல் கரீப் தெரிவித்துள்ளார்.ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவை முதல் கட்டமாக 35 நாட்டினருக்கு மட்டும் வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் வர்த்தகமும் சுற்றுலாதுறைக்கான வாய்ப்புகளும் பெருகும் என அவர் கூறியுள்ளார். ஆனால் 35 நாடுகள் எது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.ஏற்கெனவே ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 25 நாடுகளுக்கும், உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் சேர்த்து தற்போது ‘செங்கன் விசா‘ நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், இந்த நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவோர் ஒரு விசா அனுமதி பெறுவதன்மூலம் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவர முடியும்.

தற்போது சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளுக்கு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல தனி விசா பெற வேண்டும்.வளைகுடாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 31 சதவிகிதத்தினர் வெளிநாட்டவர்கள் உள்ளனர். பொதுவான விசா அமல்படுத்தப்பட்டால் வர்த்தகம் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஏதேனும் ஒரு நாட்டில் வெளிநாட்டவர் யாருக்கேனும் தடை விதிக்கப்பட்டால் ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளிலும் அது எதிரொலிக்க வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.