Breaking News

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க பேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்த போலீசாருக்கு உத்தரவு!

    

காணமல் போனவர்களை கண்டுபிடிக்க, போலீசார் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சுபேதா பேகம். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘எனது கணவர் நயினாமுகமதுவை (35) காணவில்லை. அவரை கண்டுபிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்‘ என கூறியிருந்தார். 

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க போலீசார் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தவில்லை. புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாநில, மாவட்ட குற்ற ஆவணப்பிரிவுகள் இணைந்து செயல்பட்டால், காணாமல் போனவர்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

காணாமல் போனவர்கள் குறித்து டிவி சேனல்கள், காவல்துறை இணைய தளம் மற்றும் நாளிதழ்களில் அறிவிப்பு வெளி யிட்டு மாநில, மாவட்ட குற்ற ஆவணப்பிரிவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் தகவல் தெரிவிக்க போலீஸ் அதிகாரிகள் தங்களது செல்போன் எண் மற்றும் இமெயில் முகவரியை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். தேசிய அளவில் தனி இணையதளம் உருவாக்கி காணமல் போனவர்களின் விவரங்கள் அடங்கிய தனி தகவல் களஞ்சியத்தை உருவாக்க வேண்டும். 

மேலும், கடத்தலில் ஈடுபடுவோர், காணாமல் போனவர்கள் ஆகியோரின் புகைப்படங்களை ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்ட வேண்டும். மாநில அளவில் ஐஜி தலைமையில் சிறப்புப்படை அமைத்து, அவர் களது விபரங்களை பக்கத்து மாநில காவல்துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக குற்ற ஆவணப்பிரிவை அனைத்து மாநில காவல்துறை இணையதளத்துடன் இணைக்க வேண்டும்.


வழக்கு தொடர்பான தகவல்களை பிற அதிகாரிகளுக்கு தெரிவிக்க விசாரணை அதிகாரி பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவருக்கு கீழே உள்ள அதிகாரிகளுக்கு, ஜிபிஎஸ், இமெயில், வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளத்தை கையாள் வது குறித்து 3 மாதத்திற்கு ஒரு முறை பயிற்சி அளிக்கவேண்டும். குற்றவாளிகளின் செல்போன் உரையாடல் குறித்த தகவல்களை போலீசாருக்கு வழங்குவது செல்போன் நிறுவனங்களின் கடமை. எனவே, காணமல் போனவர்களை கண்டுபிடிக்க அனைத்து துறைகளும் ஒன்றுக்கொன்று உதவ வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.