Breaking News

மேக்ஸ்வெல் விளாசல்: தொடரை வென்றது ஆஸி.

                                        maxwell, australia
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மேக்ஸ்வெல் அரை சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடரையும் 2–0 என கைப்பற்றி அசத்தியது. 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட  தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நேற்று துபாயில் இரண்டாவது ஒரு நாள் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 
பாகிஸ்தான் அணிக்கு ஷெகாதத் (61), சர்பாஸ் (65) சிறப்பான துவக்கம் தந்தனர். அசாத் சபிக் 29 ரன்களில் அவுட்டானார். மிட்சல் ஜான்சன் வேகத்தில் உமர் அக்மல் (5), அப்ரிதி (2) ஆட்டமிழந்தனர். ரியாஸ் (2), பாபர் (6) உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் திரும்ப, பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (29), பின்ச் (14), ஸ்டீவன் ஸ்மித் (12) விரைவில் வெளியேறினர். கேப்டன் பெய்லியும் 28 ரன்களில் கிளம்பினார். மேக்ஸ்வெல் தனி ஆளாக போராடினார். ரசா ஹாசன் பந்துவீச்சில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி விளாசிய இவர் அரை சதம் கடந்தார். மேக்ஸ்வெல் 76 ரன்கள் எட்டினார். முடிவில், ஆஸ்திரேலிய அணி 43.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பால்க்னர் (26), ஹாடின் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.