போலீஸ் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த கோரிய வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஐ.பிரகாஷ்ராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறியிருப்பதாவது: காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகின்றனர். அவ்வாறு தாக்கப்படுபவர்களில் சிலர், இறக்கின்றனர். இவையனைத்தையும் செய்தித்தாளில் நான் படித்தேன். இது மனித உரிமை மீறிய செயல். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி, விசாரணைக்காக நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனை போலீஸார் சுட்டனர். மேலும், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்ட பெண் சித்திரவதைக்குள்ளான சம்பவம் நடைபெற்றது. சமீபத்தில் கடந்த 15ம் தேதி ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவரை எஸ்.ஐ. மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நேர்ந்தது. சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.யும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலே கூறப்பட்ட அனைத்து சம்பவங்களும் போலீஸ் நிலையத்தில் நடந்துள்ளது.
இதுபற்றி தெரிந்து கொள்ள வசதிக்காக போலீஸ் நிலையத்தில் நடத்தப்படும் விசாரணைகளை பதிவு செய்ய கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும். போலீஸ் நிலைய நடவடிக்கைகளை தொடர்ந்து பதிவு செய்தால் அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாகவும், அந்த சூழ்நிலைகளையும் ஆய்வு செய்வது மிகவும் எளிதாக இருக்கும். இந்தப் பதிவுகளை பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆவணங்களை நிரூபனம் செய்ய முடியும். தவிர, விசாரணை வெளிப்படையாக நடப்பதற்கு இது உதவும். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்துவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று விசாரித்து, 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு, தமிழக அரசு, டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர், டிசம்பர் 16ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.