இந்திய கிரிக்கெட்டை சேப்பல் அழித்தார் ஹர்பஜன் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு
பயிற்சியாளராக இருந்தபோது இந்திய கிரிக்கெட்டை தற்காலிகமாக சேப்பல் அழித்தார் என்று ஹர்பஜன் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ‘பிளையிங் இட் மைவே’ என்ற பெயரில் சுயசரிதை எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது.
புத்தகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இருந்த கிரேக் சேப்பல் (ஆஸ்திரேலியா) செயல்பாடுகள் குறித்து தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து டிராவிட்டை நீக்க எனது உதவியை பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கேட்டார் என்று தனது சுயசரிதை புத்தகத்தில் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு சேப்பல் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் நான் பயிற்சியாளராக இருக்கும் வரையில் நீ விளையாட முடியாது என சேப்பல் என்னிடம் கூறினார் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். தொடர்ந்து சேப்பல் மீதான குற்றச்சாட்டை வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக பேசியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் "சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய கிரிக்கெட்டை அழித்தார். அதிலிருந்து இந்திய கிரிக்கெட் அணி மீள்வதற்கு 3 ஆண்டுகள் ஆனது. இந்திய அணி மீள்வதற்கு 3 ஆண்டுகள் ஆனது. அணியில் இருந்த சிலர் தங்களின் ஆதாயத்திற்காக சேப்பலுக்கு தவறான தகவலை அளித்தனர். அது அணியில் பிளவை ஏற்படுத்தியது.” என்றார்.
தங்களின் ஆதாயத்திற்காக சேப்பலுக்கு சிலர் தவறான தகவலை அளித்தனர் என்பது தொடர்பாக ஹர்பஜின் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், தவறான தகவலை அளித்த வீரர்கள் யார் என்பதை நேரம் வரும்போது தெரிவிக்கிறேன். இந்திய கிரிக்கெட் அணி எந்தநிலைக்கு செல்லும் என்று உணராமலே அவர்கள் கண்மூடித்தனமாக சேப்பலுக்கு ஆதரவு தெரிவித்தனர். என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ள ஹர்பஜன் சிங், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரின் போது போட்டியின் மீது கவனம் செலுத்தமால் கங்குலியின் மீது புகார் தெரிவித்தார்.
தொடர் நடைபெற்ற போது கங்குலியின் அருகில் இருந்துக் கொண்டே சேப்பல் அவர் மீது புகார் தெரிவித்து பி.சி.சி.ஐ.க்கு இ-மெயில் அனுப்பினார். அவருக்கு போட்டியின் மீது கவனம் இல்லை. இது எனக்கு எப்படி தெரியும் என்றால், நான் சேப்பலின் அருகில்தான் இருந்தேன். உடைமாற்றும் அறையில் இருந்தபோது அவர் கழிவறைக்கு சென்றார். அப்போது நான் அவருடைய லேப்டாப்பில் இருந்த தகவலை பார்த்தேன். மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என்று கூறினார். இதனை நான் கங்குலியிடம் தெரிவித்தபோது அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். நான் (ஹர்பஜன்), சவுரவ் கங்குலி, ஜாகீர்கான், யுவராஜ் உள்பட 7 பேரை அணியில் இருந்து தூக்கியெறிய சேப்பல் திட்டமிட்டிருந்தார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.