பன்மொழிப் புலவர் கூகுள்!
இந்தியாவில் ஆங்கிலம் அதிகமாக பேசப்படுகிறது என்று கூறப்பட்டாலும், இன்னமும் 60% மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதே உண்மை. இதனால், இணைய தளங்களில் இருந்து அவர்களால் தகவல்கள் திரட்ட முடிவதில்லை. இந்த விஷயத்தைக் கண்டறிந்திருக்கும் கூகுள் நிறுவனம், இதற்கு ஒரு தீர்வாக கூகுள் ‘இ-பாஷா' (e-basha) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் இதுவரை 200 மில்லியன் மக்கள்தான் இணையத்தை முழுமையாகப் பயன்படுத்துவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதை, 2017ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் மக்கள் என்கிற அளவுக்குஉயர்த்த வேண்டும் என்பதுதான் கூகுளின் திட்டம். இதற்காகத்தான், ஆங்கிலம் அறியாதவர்களும் தகவல்களைப் பெறும் வகையில் ‘இபாஷா’ திட்டத்தை ஆரம்பித்துள்ளது கூகுள்.
இதன்படி, கூகுளில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளனர். தாய்மொழியில் தகவல்கள் கிடைத்தால், இன்னும் அதிகமானோர் கூகுளை பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.
‘இண்டியன் லாங்குவேஜ் இன்டர்னெட் அலையன்ஸ்’ என்கிற குழு, கூகுளின் இந்த மொழிபெயர்ப்பு பணியில் கைகோர்க்கிறது. இத்துடன் ‘கூகுள் ஸ்பீச் ரெகனைசேஷன் டூல்’ என்பதையும் துவங்க திட்டமிட்டிருக்கின்றனர்.
தற்போது இந்தி மொழியில் மட்டுமே தொடங்கப்பட்டிருக்கும் இந்தச் சேவை, விரைவில் தமிழ், மராத்தி, பெங்காலி என மற்ற இந்திய மொழிகளிலும் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் இனி இன்னும் நெருக்கமாக வரப்போகிறது. வாழ்த்துக்களோடு வரவேற்போம்.
உலகம் இனி இன்னும் நெருக்கமாக வரப்போகிறது. வாழ்த்துக்களோடு வரவேற்போம்.