Breaking News

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டித்தொடர் இனிமேல் கிடையாது: வெளியானது திடீர் அறிவிப்பு.

மும்பை: சாம்பியன்ஸ் லீக் போட்டித்தொடர் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரு வருடங்களுக்கு இடை நீக்கத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், சாம்பியன்ஸ் லீக் நிர்வாக குழு கூடி, இம்முடிவை அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. சாம்பியன்ஸ் லீக்கிற்கு வரவேற்பு இல்லை என்று இம்முடிவுக்காக காரணம் கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ, கிரிக்கெட் சவுத் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து சாம்பியன்ஸ் லீக் டி20 நிர்வாக குழுவை உருவாக்கினர்.

இந்த 2009ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும், செப்டம்பர் மாதவாக்கில் நடைபெறுவது வழக்கம். பல நாடுகளின் உள்ளூர் டி20 அணிகள் இதில் பலப்பரிட்சை நடத்தும்.

ஆனால், டி20 நிர்வாக குழு கூட்டம் அவசரமாக கூடி, இந்த லீக்கை முற்றிலுமாக ரத்து செய்வது என்று முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ கூறியுள்ளதாவது: இந்தியாவில் ஐபிஎல், தென் ஆப்பிரிக்காவில் ராம் ஸ்லாம் டி20, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் போன்ற டி20 தொடர்கள் நடைபெறுகின்றன. இதனால் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளுக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்துள்ளது.

இதனால், சாம்பியன்ஸ் லீக்கின், நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி இத்தொடரை ரத்து செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. விளம்பரதாரர், ஸ்பான்சர்கள் என அனைவரிடமும் கலந்து ஆலோசித்து இம்முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஆடிய சென்னை, ராஜஸ்தான் அணிகள், சூதாட்ட புகாரால், 2 வருட சஸ்பெண்ட் தண்டனைக்கு உள்ளாகியுள்ள நிலையில், சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரத்தாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கருத்துகள் இல்லை