Breaking News

போலீஸ் மீது புகார் தெரிவிக்க பிரத்யேக போன் எண்:97109 00100க்கு டயல் செய்யலாம்

வாகன ஓட்டிகளிடம், போலீசார் சட்ட விரோதமாக பணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க, பிரத்யேக மொபைல் போன் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில், 32 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. தினசரி, 1,000 என, மாதத்திற்கு, 30 ஆயிரம், இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன.

போக்குவரத்து நெரிசல் :இதுதவிர கார், வேன், பேருந்து, கன்டெய்னர் லாரி என, லட்சக்கணக்கில் பெருகி, சென்னையை, போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன.

இதனால் விபத்துகள் தவிர்க்க முடியவில்லை; உயிரிழப்பும் அதிகரித்து வருவதை போலீசார் கண்டறிந்தனர்.

உயிர் பலி :மேலும், வார இறுதி நாளான சனிக்கிழமைகளில், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் உயிர் பலி அதிகரிக்க, அதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு போலீசார்
தள்ளப்பட்டனர்.

அதற்காக, சென்னையில் அதிகமாக விபத்து நடக்கும், 120 இடங்களை தேர்வு செய்து, அந்த இடங்களில் தினசரி வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சனிக்கிழமை, 240 இடங்களாக அதிகரிக்கும்.போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து சட்டம் - ஒழுங்கு போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபடுவர்.

அவர்களை, துணை போலீஸ் கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரி கண்காணிப்பார். இந்த நடை முறை, விபத்து குறைப்புக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக, போலீசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.இதுதவிர, சென்னை, கே.கே.நகரில், அதிதீவிரமாக வாகன சோதனை நடத்தி, வாலிபர் ஒருவர் வயிறு கிழிந்து இறக்க நேரிட்ட அளவுக்கு, பணியில் கவனக் குறைவு கூடாது எனவும், போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நச்சரிக்கும் போலீஸ்:குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம், பிடிபடும் இடத்தில் பணம் வசூலிக்க கூடாது என்பது விதி. வாகனம் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் பணம் கட்டிய பின் தான், வாகனத்தை அவர் திரும்ப பெற வேண்டும்.ஆனால், போலீசார் சிலர், வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டு நச்சரிப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்று சட்ட விரோதமாக பணம் கேட்பவர்கள் பற்றி புகார் தெரிவிக்க, உயர் போலீஸ் அதிகாரிகள், 97109 00100 என்ற பிரத்யேக மொபைல் போன் எண்ணை அறிமுகம் செய்துள்ளனர்.

ஒத்துழைப்பு :அந்த எண் அடங்கிய விளம்பர தட்டியை, 120 சோதனை இடங்களிலும் வைத்துள்ளனர். இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போக்குவரத்து மேலாண்மை சாத்தியம் இல்லை; அதற்காக இந்த பிரத்யேக மொபைல் போன் எண்ணை அறிமுகம் செய்துள்ளோம்'


கருத்துகள் இல்லை