Breaking News

நாகூர் - முஸ்லிம் வணிகர்கள் - ஒரு வரலாற்றுப் பார்வை.


நாகப்பட்டினத்திலும், நாகூரிலும் முஸ்லிம் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். நாகூரில் வாழ்ந்து வந்த முஸ்லிம் வணிகர்கள் பற்றிய செய்திகளும், நாகூர் துறைமுகம் குறித்த செய்திகளும் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. 

இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகப் பெருமக்கள் கப்பல் உரிமையாளர்களாகவும், கப்பல் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்பவர்களாகவும் இருந்தனர். 

முஸ்லிம் வணிகர்கள் அனைவருமே கப்பல்கள் வைத்திருக்கவில்லை. ஒருசில வணிகர்களுக்குச் சொந்தமாக இருந்த கப்பல்களில் பிற வணிகர்கள் தங்களது வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்று வாணிபம் செய்துள்ளனர்.
வணிகத் தொடர்பு

நாகூர் கடற்கரையில் 16-ம் நூற்றாண்டில் ஐந்து கோயில்கள் இருந்தன. இந்தக் கோயில்கள் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன. 

இத்துறைமுகத்திற்கு ஒன்றை மரப்பாய் கப்பலிலிருந்து, 300 டன் எடையுள்ள கப்பல் வரை வந்து சென்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகர்கள் சுமத்தரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். 

முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாவன : அரிசி, சங்கு , மிளகு மற்றும் துணிவகைகள். 

இறக்குமதிப் பொருட்களாவன : பாக்கு, யானை, குதிரை, தேங்காய், உலோகங்கள் மற்றும் வாசனை திரவியங்கள்.

நாகூர் துறைமுகத்திலிருந்து மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பிற துறைமுகங்களுக்கும் வணிகத் தொடர்பு மிக அதிகமாக இருந்து வந்தது. 
மேலும் நாகூர் துறைமுகம் வெட்டாறின் கிளையான குடவளாற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால், ஆற்றில் தண்ணீர் அளவு கணிசமாக இருக்கும்போது, ஆற்றினுள் குறைந்த எடையுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் போக்குவரத்து நடந்து வந்தது. 

இதன்மூலம் உள்நாட்டு விளைபொருட்களை, துறைமுகத்திற்குஏற்றிவர ஏதுவாக இருந்தது.

போர்த்துக்கீசியர் காட்டிய பகை உணர்வு

16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர் நாகப்பட்டினம் துறைமுகத்தைப் பிடித்துக் கொண்டனர். இயல்பாக அவர்கள் முஸ்லிம்கள் மீது காட்டிய பகை உணர்வு அங்கு வாழ்ந்த முஸ்லீம் வணிகர்களை நிலைகுலையச் செய்தது. 

போர்த்துக்கீசிரியன் அனுமதிச்சீட்டுடன் (cartaz) முஸ்லீம் வணிகர்களும் வாணிபத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லீம் வணிகர்கள் அவர்களை விட்டு விலகிச் சென்று நாகூர் துறைமுகத்திலிருந்து தங்களது வாணிப நடவடிக்கைகளை நடத்தி வந்தனர். 

நம் நாட்டு மன்னர்களிடையே ஏற்பட்ட பிணக்குகளினாலும் ஐரோப்பியர்களின்தலையீட்டினாலும் தமிழகத்தின் அரசியல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக முஸ்லீம் வணிகர்களும் அவர்களது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன.

பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்டது மட்டுமின்றி நாகூர் துறைமுகத்திலிருந்த முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமான இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றார் என்பதிலிருந்து முஸ்லிம் வணிகர்களின் செல்வச் சிறப்பையும் அதே சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் அறிய முடிகிறது.

1773-ல் மராட்டிய மன்னர் நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களை டச்சுக்காரர்களுக்கு விற்றுவிட்டனர்.இதை ஆற்காடு நவாப் எதிர்த்து தம் வசப்படுத்திக்கொண்டார். பின்னர் 1788-ல் நாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 277 கிராமங்களை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா ஆங்கிலேயருக்கு அளித்தார். 

இதன்பின் நாகூர் துறைமுகம் ஆங்கிலேயரின் வசமானது. 1780-ல் ஹைதர்அலி நாகப்பட்டினத்தின் மீது படையெடுத்து வந்தார். அப்போது நாகூர் ஆங்கிலேயர் வசமிருந்தது. 

நாகப்பட்டினத்திலிருந்து டச்சுக்காரர்கள்ஹைதர்அலிக்கு உதவி அளித்தனர். ஹைதரின் படைகள் நாகூர்ப் பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தின. நாகூர் பகுதி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. நாகூரிலிருந்த வணிகப் பெருமக்களும் பொதுமக்களும் பயந்து பல இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் என்று நாகூரிலிருந்த ஆங்கிலேய பிரதியின் அறிக்கை கூறுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி

தஞ்சாவூர் பகுதி முழுவதும் 1799-ல் ஆங்கிலேயர் வசமானது. நாகப்பட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது. பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது.

நெசவு மற்றும் தொழில்வளர்ச்சி

அரசியல் குழப்பங்களினால்குடிபெயர்ந்து சென்ற வணிகர்களையும், நெசவாளர்களையும் நாகூருக்கு வந்து குடியமர ஆங்கிலேய அரசு பல சலுகைகளை அளித்தது. முஸ்லீம் வணிகர்கள் மீண்டும் நாகூருக்கு வந்து சேர்ந்தனர். நாகூரில் பலவித வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன. 

வீட்டுவரி தவிர பிற வரிகள் ரத்து செய்யப்பட்டன. வணிகர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் பொருட்டு ஆங்கிலேயர் ஒரு வங்கியை நாகூரில் ஏற்படுத்தினர்.

நாகூரில் ஒரு வகை ஊதா நிறத் துணி உற்பத்தி செய்யப்பட்டது. Naguri Blue Cloth எனும் இத்துணிக்கு இங்கிலாந்திலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் நல்ல கிராக்கி இருந்தது.நாகூரில் ஒரு சாயத் தொழிற்சாலையும் ஏற்படுத்தப்பட்டது. நெசவாளர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. நாகூர் பகுதியில் சுமார் 4000 நெசவாளர்கள், 1100 தறிகளில் இவ்வகை ஊதா துணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு அளித்து வந்தனர்.

 நெசவாளர்களில் பெரும்பாலோனோர் முஸ்லிம் மக்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உற்பத்தியாகும் ஊதா துணியில் பெரும் பகுதியை முஸ்லிம் வணிகர்கள் வாங்கி ஜாவா, இங்கிலாந்து, மலாக்கா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு தங்களது கப்பல்களிலும் ஆங்கிலேய வணிகர்களின் கப்பல்களிலும் அனுப்பினர். ஆங்கிலேய கம்பெனியும், செட்டியார் இன வணிகர்களும் ஆங்கிலேய தனியார் வணிக நிறுவனங்களும் இவ்வகைத் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தனர்.

 இந்து வணிகர்களும், முஸ்லிம் வணிகர்களும் ஒற்றுமையுடன் இருந்து வாணிபம் நடத்தி நாகூரின் வளம் பெருக்கினர்.

சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள்

முஸ்லிம் வணிகர்களான மரைக்காயர்கள் குறித்த செய்திகள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன.மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன் ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில்காணக்கிடக்கின்றன. இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். 

சில வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். 1722-ல் ஆங்கிலேயர் அச்சை நாட்டில் ஒரு வணிகச் சாவடி ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகமது காசிம் மரைக்காயர் மூலமாகவே அணுகவேண்டி வந்தது. 

இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும் முகமது காசிம் மரைக்காயர் பினாங்கிலும் கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும் பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது.[35] இது போன்று தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சை, சுமத்தரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்கியதை ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
[தொகு]கப்பல் வணிகர்கள்

1796-ம் ஆண்டு பதிவேடு ஒன்று நாகூரில் சுமார் 70 முஸ்லீம்கள் கப்பல் வணிகர்களாகத் திகழ்ந்தனர் எனத் தெரிவிக்கிறது. இவர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை நாகூரிலேயே கட்டிக் கொண்டனர். இவ்வாண்டில் ஏழு கப்பல்கள் மட்டும் நாகூர் மற்றும் நாகப்பட்டினத் துறைமுகங்களில் முஸ்லிம் வணிகர்களுக்குச்சொந்தமானவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வணிகர்கள் இக்கப்பல்களில் தங்கள் வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்றிருக்க வேண்டும். 

இதற்குரிய வாடகை, கமிஷன் போன்றவற்றை கப்பல் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர். கப்பல் சரக்குக் கட்டணம், பொருட்களின் மதிப்பில் 14% கமிஷன், 7 1/2% இன்ஷ¥ரன்ஸ் திட்டமும் இருந்தது. பிரிமியம் 16% ஆகும். பெரும்பாலும் கப்பல் உரிமையாளர் கப்பலில் செல்வது கிடையாது. கப்பல் தலைவரான நகுதாவின் பொறுப்பில் கப்பல் ஒப்படைக்கப்படும். நகுதாவும் தனது ஊதியத்திற்குப் பதிலாக தனது வணிகப் பொருட்களை கப்பலில் ஏற்றிச் செல்லுவார். 

நாகூர் வணிகர்களின் வணிக நடைமுறைகள் பழக்கங்கள் குறித்த சுவையான பல செய்திகள் ஐரோப்பியரின் பதிவேடுகளில் நமக்கு கிடைக்கின்றன. தங்களது கப்பல்களை பதிவு செய்து கொண்டு உரிய சுங்கத் தீர்வைகளை செலுத்திய வணிகர்கள் மட்டுமின்று பதிவு செய்யப்படாத கப்பல்களும் பல இருந்தன. சுங்கத் தீர்வையை ஏய்த்து பொருட்களை ஏற்றிவந்த இதுபோன்ற கப்பல்கள் ஆங்கிலேயரால் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமும் விதிக்கப்பட்டது. நாகூர் பக்கிரி மரைக்காயர் 1823-ல் இலங்கையிலிருந்து அனுமதியின்றி பாக்கு ஏற்றிக் கொண்டுவந்தபோது கண்டுபிடிக்கப்படு அவரது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது.

கபூல் முகமது மரைக்காயர் தனது கப்பலில் அனுமதின்றி வங்காளத்திற்கு சங்கு ஏற்றிச் சென்றபோது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகூர் துறைமுகக் கப்பல்களில் நகுதா, சிராங்கு, மாலுமி, கிராணி, சுக்காணி போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த பல முஸ்லிம்களின் பெயர்கள் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன.


கி.பி. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகூர் மரைக்காயர்கள் தங்களது கப்பல்களை கொழும்பு, அச்சை, பினாங்கு, மலாக்கா, மலேயா ஆகிய நாடுகளுக்கு வணிக நிமித்தம் அனுப்பி வந்தனர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர்களின் தொடர்பாக இந்தியாவிலும் ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் பகை மூண்டது. இப்போர்களில் நடுநிலை வகித்து வந்த டேனிஷ்காரர்களின் கொடி மற்றும் அனுமதிச்சீட்டுடன் நாகூர் மரைக்காயர்கள் தங்கள் கப்பல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தனர். 

ஆனால் டேனிஷ்காரர்கள் நடுநிலையிலிருந்து மாறியபோது, அவர்களது அனுமதிச்சீட்டுடன் சென்ற கப்பல்களை பிரஞ்சு நாட்டு போர்க்கப்பல்கள் வளைத்துப் பிடித்தன. பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையிலிருந்து தங்களை காப்பாற்றக்கோரி நாகூர் முஸ்லிம் வணிகர்கள் ஆங்கிலேய அரசிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றனர்.இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ள பதினேழு பேர்களுள் பதிமூன்று பேர் முஸ்லிம்கள் ஆவர். 

அவர்களது பெயர்கள் வருமாறு :- 
முகமதலி மரைக்காயர், முகமது சையது மரைக்காயர், அலிசாயபு நகுதா, ஹபீப் முகமது மாலுமி, பீர் சாஹிப் நகுதா, முத்துனா சாஹிப், சையது இஸ்மாயில் லப்பை, முகமது ஹபீப் மரைக்காயர், மதார் சாஹெப் நகுதா, சையது முகமது நகுதா, சுலைமான் மாலுமி, பக்கீர் முகமது நகுதா, சித்தி முகமது இப்ராஹிம் நகுதா. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாகூர் வணிகர்களின் கப்பல்கள் வாணிகப் பொருட்களோடு பயணிகளையும் தூரக்கிழக்கு நாடுகளுக்கு ஏற்றிச் சென்றன. 

மலாக்கா, மலேஷியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுக்கு பெருமளவிற்கு முஸ்லிம்கள் சென்றனர். அங்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டதின் பயனாக தொழிலாளர்கள் நிறைய தேவைப்பட்டனர். நாகூரிலிருந்தும் இந்நாடுகளுக்குச் சென்றவர்கள் அந்நாடுகளில் தொழிலாளர்களாகவும், வணிகர்களாகவும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டும் இருந்தனர்.

 1786-ல் பினாங்கும் 1824-ல் சிங்கப்பூரும் உருவானபோது நாகூர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மரைக்காயர்கள் அங்கெல்லாம் கணிசமான என்ணிக்கையில் இருந்தனர். நாகூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற மரைக்காயர்கள் தங்களது ஆன்மீகத் தேவைகளுக்காக அங்கெல்லாம் நாகூர் ஆண்டவர் பெயரால் தர்காக்கள் கட்டி ஆண்டுதோறும் நாகூரில் நடைபெறுவதுபோல் கந்தூரியும் நடத்தினர். 

இதுபோன்ற கலாச்சார மையங்கள் (தர்காக்கள்) சிங்கப்பூரிலும், பினாங்கிலும் இன்றும் உள்ளன. மேலும் நாகூர் தர்காவில் கந்தூரியின்போதுஏற்றுவதற்காக ‘கொடி’, கப்பல் மூலம் அனுப்பி வந்தனர்.

1848-ல் சுமார் பத்து கப்பல் உரிமையாளர்கள் மட்டும் நாகூரில் இருந்தனர் என்பதற்கு அங்கு பதிவாகியுள்ள கப்பல்களின் பெயர்களைக் கொண்டு அறிகிறோம். இவை அனைத்தும் பாய்மரக் கப்பல்கள். 

அவையாவன : காதர்மீரா, ஷம்ஷீர், ஜூலிக்ஸ், கூடு காதர் பக்ஸ், பதேகாசிம், சகியா, பால காதர், அகமது பக்ஸ் முகமது மைதீன் பக்ஸ், ஜஹாங்கீர், ஷாஹ¥ல் ஹமீது. இக்கப்பல்கள் சிங்கப்பூர், பினாங்கு, பர்மா, ஆகிய நாடுகளுக்கு பெரும்பாலும் பயணிகளை ஏற்றிச் சென்றன. குறைந்த அளவில் வணிகப் பொருட்களையும் ஏற்றிச் சென்றன

19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு சில கப்பல் உரிமையாளர்களையும், கப்பல் வணிகர்களையும் நாகூரில் காண முடிகிறது. இவர்களும் பொருளாதரத்தில் முனைப்பாக இல்லை என்பதும் தெரிய வருகிறது. இக்காலத்தில் செட்டியார் வணிகர்கள் பெரும் பணக்காரர்களாக விளங்கினர். முஸ்லிம் வணிகர்கள் பலர் அவர்களிடம் கடன் பெற்று வணிகம் செய்துள்ளனர். நாகூரில் வசித்த அரசன் குத்தூஸ் மரைக்காயர், லார்டு ஹாரிஸ் என்ற கப்பலுக்கு உரிமையாளர்.

 இவர் 1890-ல் சாமிநாத செட்டியார் என்பவரிடம் ரூ.10,000 கடனாகப் பெற்று, பெற்ற கடனை திருப்பி அளிக்க முடியாமல் கப்பலையே கொடுத்து ஈடு கட்ட வேண்டியதாயிற்று.
இவரது சகோதரர் அகமது நைனா மரைக்காயர் ஒரு கப்பல் வணிகர் என்ற செய்தியும் கிடைக்கிறது.
மேலும் பல கப்பல் வணிகர்கள் வாழ்ந்திருக்கின்றனர். 

அவர்களைப் பற்றிய செய்திகளை அறியக்கூடவில்லை. மரைக்காயர் தெரு, செராங்கு தெரு, மாலுமியார் தெரு, நகுதா தெரு, பயலட் தெரு என்பன இங்கு வாழ்ந்த கப்பல் வணிகர்களை நினைவு படுத்துகின்றன.

1867-ம் ஆண்டில் நாகூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் நாகூர் வணிகர்களும் நாகப்பட்டினத்திலிருந்து தங்களது வாணிபத்தைத் தொடர்ந்தனர். சிறிய பாய்மரக் கப்பல்கள் மூலம் இலங்கை, மேற்குக் கடற்கரை, கல்கத்தா, துறைமுகங்கள், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் சிறிய அளவில் வணிகம் செய்துவந்துள்ள செய்திகள் தெரிய வருகின்றன. ஆனால் பிற நாடுகளுக்குச் சென்ற செய்திகள் கிடைக்கவில்லை. 

அதிக எடை கொள்ளளவு உள்ள ஆங்கிலேயரின் நீராவிக் கப்பல்களுடன் மரைக்காயர்களின் பாய்மரக் கப்பல்கள் போட்டிபோட முடியவில்லையாதலாலும் ஆங்கிலேலேயரின் பெரும் மூலதனத்துடன் இவர்களது குறைந்த மூலதனம் ஈடுகொடுக்க முடியாததாலும் ஏறத்தாழ 16-ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லிம் இனம் சார்ந்த அரசுகளில் ஆதரவு இல்லாததாலும், கிழக்குக் கடற்கரை முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நசிந்து மறைந்து போயிற்று. இதில் நாகூர் வணிகர்களும் அடங்குவர்.
புலவர்கள்

17-18-ம் நூற்றாண்டுகளில் நற்றமிழ் புலவர்கள் பலர் நாகூரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இலக்கிய உலகிற்கும் தமிழுக்கும் நல்ல சேவை புரிந்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்ட புலவர்களின் பெயர்களும் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளும் நமக்கு தெரிய வருகின்றன. நாகூர் தந்த நல்ல தமிழ் புலவர் வரிசையில் முதலிடம் வகிப்பவர் குலாம் காதிர் நாவலர் ஆவார்கள். 

திரைகடலோடி தேடிய திரவியத்தை தக்கார்க்கு வேளாண்மை செய்வதில் நாகூர் வணிகர்கள் சிறந்து விளங்கினர். இவர்களது கொடைத் தன்மையினால் பல இஸ்லாமிய இலக்கியங்கள் உருவாகியுள்ளன என்பதை இஸ்லாமிய இலக்கிய வரலாற்று நூல்கள் பெருமையுடன் பேசுகின்றன
நாகூரின் வணிக, ஆன்மீக கலாச்சார வரலாறு குறித்த ஒரு அறிமுகமே இக்கட்டுரை. நாகூர் குறித்து பதிவேடுகள் கூறும் விரிவான செய்திகள் மூலம் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றை தெளிவுபட தெரிந்துகொள்ள மேலும் பல செய்திகள் நமக்குத் தெரியவருகின்றன.

கருத்துகள் இல்லை