நாகூர் ஹனிபா அவர்களின் மறக்க முடியாத நினைவுகளுடன்
பதிவு கவிஞர் நாகூர் காதர்ஒலி அவர்கள் :
1950,52 காலகட்டம். இசைமுரசு நாகூர் ஹனிபா அண்ணன் பாடகராக உருவாகி அறிஞர் அண்ணாவுடன் மிகவும் நெருங்கி பழகி வரும் நேரம் அது. தனது வெண்கல குரலால் அனைத்து மேடைகளிலும் பிரச்சாரப் பாடல்களைப் பாடி மக்களை ஈர்க்கின்ற தருணம். அண்ணா அவர்களும் எங்கே சென்றாலும் ஹனிபா அண்ணனையும் கூடவே அழைத்து செல்வார்.m அண்ணா அவர்களுக்கு ஹனிபா என்றாலே தனிபட்ட பிரியம். காரணம் அவரது வெண்கல குரல், மற்றும் கொள்கைப் பிடிப்பு.
ஒரு நாள் ராமநாதபுரத்தில் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம். அங்கே அறிஞர் அண்ணா பேசுகிறார். அதே நேரத்தில் இசை முரசுக்கு அந்த பகுதியில் வேறு இடத்தில் இசை நிகழ்ச்சி. அப்போதெல்லாம் கூட்டமோ, கச்சேரியோ முடிய பின்னிரவு 1 மணி, 2 மணிக் கூட ஆகும்.
அன்று ஹனிபா ராமநாதபுரத்தில் தான் இருப்பார் என்பது அண்ணாவுக்கு தெரியும். கூட்டம் முடிந்ததும் ஹனிபாவை சந்தித்து விட்டு போகலாம் என்ற எண்ணத்தில் தனது காரை ஹனிபா வீட்டிற்கு போகும்படி டிரைவரிடம் சொல்ல காரும் ஹனிபா வீட்டு வாசலில் போய் நிற்கிறது. தெருவோ எவ்வித அரவமுமின்றி அமைதி நிலவும் சூழ்நிலை. எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சமயம். ஹனிபா வீட்டுக் கதவுகளும் சாத்தப்பட்டு இருக்கிறது. ஹனிபா உறங்குகிறார் என்பதை உணர்ந்துக் கொண்ட அண்ணா அவர்கள், அடுத்த வீட்டருகே தனது காரை நிறுத்த சொல்லி விட்டு காரிலேயே ஓய்வு எடுக்கிறார்.
நேரம் நகர்கிறது. அதிகாலை பொழுது ஹனிபா அண்ணனின் தாயார் வீட்டு வாசல் கதவை திறந்து வெளியில் வந்து பார்க்கிறார். பக்கத்து வீட்டு வாசலில் ஒரு கார் நிற்பதை காண்கிறார். அதன் நம்பரை உற்று நோக்குகிறார். ஆஹா அண்ணாவின் கார் அல்லவா இது. இந்த நேரத்தில் ஏன் இங்கே நிற்கிறது என்ற பதட்டத்துடன் உள்ளே ஓடி சென்று ஹனிபாவை எழுப்பி அடேய் தம்பி சீக்கரம் எழுந்திரு அண்ணாவின் கார் வாசலில் நிற்கிறது என்று சொல்ல, ஹனிபா அவர்களும் திடுதிப்பென எழுந்து ஓடி வந்து வாசலில் பார்க்கும் போது அண்ணா அவர்கள் காரின் பின்பக்க சீட்டில் கால்களை நீட்டி படுத்து இருப்பதைக் கண்டு அவசர அவசரமாக பக்கத்தில் சென்று என்ன அண்ணா இது ஒரு சத்தம் கொடுத்து இருந்தால் ஓடி வந்திருப்பேனே, எப்போ வந்தீங்க, என்ன செய்தி என கேட்க,
உன்னைப் பார்த்து போகலாம் என்றுதான் வந்தேன். நான் ஒரு மணிக்கே இங்கே வந்து விட்டேன். நீ நல்லா தூங்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்தேன். நீயும் விடிய விடிய கச்சேரி செய்து விட்டு களைப்புடன் உறங்கிக் கொண்டு இருக்கிறாய். உனது உறக்கத்தை கெடுக்க நான் விரும்பவில்லை. சரி இப்படியே நாமும் காரிலேயே கொஞ்ச நேரம் உறங்கி விட்டு பொழுதுப் புலர்ந்த்தும் உன்னைப் பார்த்து பேசி விட்டு போகலாம் என ஓய்வு எடுத்துக் கொண்டேன் என அண்ணா சொன்னதும் ஹனிபா அவர்கள் மெய் சிலிர்த்து உறைந்து போய் விட்டார்கள்.
கோடான கோடி தமிழ் மக்களின் தலைவன் என் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பதா? என கண்ணீர் மல்க ஆதங்கப்பட்டார்கள். அதன் பின் இருவரும் உள்ளே சென்று வெகுநேரம் உரையாடி காலை உணவு சாப்பிட்டப் பின் அண்ணா அவர்கள் புறப்பட்டார்கள்.
மற்றொரு சம்பவம் அண்ணா அவர்கள் தனது காரில் ஹனிபா அண்ணன் மற்றும் சில சிலருடன் கிராமபுற ரோட்டில் போய் கொண்டிருக்கும் போது 4,5, முயல்கள் ரோட்டைக் கடந்து வயலுக்குள் ஓடுகின்றன. இதைக் கண்ட அண்ணா உடனே காரை நிறுத்தி அந்த முயல்களைப் பிடித்து வாருங்கள் என ஹனிபாவிடமும் மற்றவர்களிடம் சொல்ல, ஒரே பாய்ச்சலில் ஓடோடிச் சென்று துரத்திப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள். இன்று பகல் இதுதான் நமக்கு கறி.
ஆகவே ஹனிபா இதை நீ அறுத்தால் தான் நாம் எல்லோரும் சாப்பிட கூடும். எனவே ஹனிபா உடனே அறுக்கவும் ( ஹலால் உணவு ஆகும் என்ற நோக்கத்தில்) என சொல்லியுடன் ஹனிபா அவர்கள் அவற்றை அறுத்தார்கள். பின்னர் செல்ல வேண்டிய இடம் சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். எப்படிப்பட்ட இணக்கமான நெருக்கம் !!!
இதைபோல் எத்தனையோ அருமையான நெகிழ வைக்கும் சம்பவங்கள் உள்ளன. இந்த தகுதி இசைமுரசை தவிர வேறு யாருக்கும் கிடைப்பது அரிது அரிது அரிதிலும் அரிது. இசைமுரசின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் இதனை உங்களுடன் பகிர்வதில் எனது நெஞ்சம் நாகூர் ஹனிபா அவர்களின் மறக்க முடியாத நினைவுகளுடன் அவருக்காகப் பிரார்த்தனைச் செய்கிறது..
கருத்துகள் இல்லை