Breaking News

வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க இனிமேல் 2 முறைதான் இலவசம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.


மும்பை: வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் இனிமேல் மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே வேறு வங்கியின் ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுக்க முடியும்.  மூன்றாவது முறை பணம் எடுக்கும் போது, அதற்கு கட்டணமாக ரூ.20 செலுத்த வேண்டும். இதற்கான உத்தரவை இந்தியன் ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. இது  வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோமேடிக் டெல்லர் மெஷின் எனப்படும் ஏடிஎம்கள் வந்தபிறகு, வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பது  வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சுலபமாகி விட்டது. பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிகளுக்கு சென்று காசோலை பூர்த்தி செய்து கேஷியர் முன்பு நீண்ட நேரம்  காத்திருக்க வேண்டிய காலம் மறைந்து விட்டது. இப்போது தெருவுக்கு இரண்டு, மூன்று ஏடிஎம்கள் வந்துவிட்டன. 

 ஏடிஎம்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது அந்தந்த வங்கிகளின் ஏடிஎம்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. கடந்த 2009ம் ஆண்டு இந்த  கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த வங்கியின் ஏடிஎம்களையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால்,  ஏடிஎம்களை வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினர். சில குறிப்பிட்ட வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் சீக்கிரம் காலியாக தொடங்கியது. அதன்  ஏடிஎம்களில் பணம் வைப்பதற்கான செலவு அதிகரிக்க தொடங்கியது. மற்ற வங்கியின் ஏடிஎம்மை பயன்படுத்தும் போது ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.18ஐ  சம்பந்தப்பட்ட வங்கிகள் அடுத்த வங்கிக்கு கொடுத்து வந்தன. 

இதனால் அடுத்த வங்கிக்கு செலுத்த வேண்டிய கட்டணமும் கணிசமாக அதிகரித்தது.இதனால், அடுத்த வங்கி ஏடிஎம்மை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும்  என ரிசர்வ் வங்கியை வங்கிகள் கேட்டுக் கொண்டன. இதையடுத்து, ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளவர் மாதம் 5 முறை மட்டுமே இலவசமாக அடுத்த வங்கி  ஏடிஎம்களை பயன்படுத்தலாம் என கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அதற்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ.15 கட்டணம் வாடிக்கையாளர்  கணக்கில் வங்கிகள் பிடித்தம் செய்யும். சில ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது.

தற்போது நகர்புறங்களில் உள்ள அடுத்த வங்கி ஏடிஎம்களை மாதத்துக்கு இருமுறை மட்டுமே இலவசமாக பயன்படுத்திக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி புது உத்தரவு  பிறப்பித்துள்ளது. கிராமப்புறங்களில் தொடர்ந்து 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வங்கிகள் விரைவில்  அமல்படுத்தும் என தெரிகிறது. ஒரு சில வங்கிகளின் ஏடிஎம்கள் தெருவுக்கு தெரு உள்ளன. சில வங்கிகளின் ஏடிஎம்களை தேட வேண்டிய நிலை உள்ளது. ரிசர்வ்  வங்கியின் புது உத்தரவு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துகள் இல்லை