மலேசிய விமானங்கள் இனி காணாமல் போகாது, ஏவுகணை தாக்காது!.. பெயரை மாற்ற முடிவு !!
கோலாலம்பூர்: அடுத்தடுத்து விபத்துகளில், சிக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும், மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் பயணிகளிடம் இழந்துள்ள நம்பிக்கையை மீண்டும் பெற அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விமானம் மாயம்: கடந்த மார்ச் மாதத்தில் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங்கிற்கு பயணித்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் எம்எச்370 விமானம் நடுவானில் மாயமானது. இதுவரை அந்த விமானத்தில் பயணித்த 239 பயணிகள் மற்றும் ஊழியர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: இந்நிலையில் இம்மாதம், ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17, உக்ரைன் வான் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெயரை கேட்டாலே ஓட்டம்: இதையடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு உலக அளவில் மதிப்பு குறை ஏற்பட்டுள்ளது. அந்த பெயரை கேட்டாலே பயணிகள் அலறியடித்து ஓடுகிறார்கள். எனவே ஏர்லைன்ஸ் பெயரை மாற்றி உலக அளவில் மீண்டும் மதிப்பை தக்க வைத்துக்கொள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.
மலேசிய அரசு திட்டம்: மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் அந்த நாட்டு அரசிடம் உள்ளன. எனவே பெயர் மாற்றும் யோசனையையும் மலேசிய அரசே முன்னெடுத்துள்ளது. ஏர்லைன் வணிக இயக்குநர் ஹுக் டன்லேவி இத்தகவலை ஆங்கி பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
50 ஆயிரம்பேர் பயணம்: மேலும் அவர் கூறுகையில், "ஏர்லைன்ஸ் பெயரை மாற்றுவது, ரீபிராண்ட் செய்வது போன்ற பல திட்டங்கள் கைவசம் உள்ளன. தற்போது தினமும் 50 ஆயிரம் பயணிகளை மலேசியன் ஏர்லைன்ஸ் ஏற்றிச்செல்கிறது. 20 ஆயிரம்பேர் ஊழியர்களை கொண்ட நிறுவனம் இது" என்றார்...