கேப்டன் பொறுப்பில் விலகுவீர்களா என கேள்வி? பொறுத்திருந்து பாருங்கள் என தோனி பதில்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 15–ந்தேதி தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 148 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2–வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 385 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 116.3 ஓவர்களில் 486 ரன்கள் குவித்து 337 ரன்கள் வலுவான முன்னிலையை எட்டியது.
அடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே 337 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்ற உச்சக்கட்ட நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி 2–வது இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்தின் அசுர வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அணி 2–வது இன்னிங்சில் வெறும் 29.2 ஓவர்களில் 94 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 100 ரன்னுக்குள் முடங்குவது இது 9–வது முறையாகும்.இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
இந்த போட்டிக குறித்து பின்னர் இந்திய கேப்டன் டோனி கூறுகையில், ‘நெருக்கடியால் ரன்கள் குவிக்க முடியவில்லை என்று இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் கருதுகிறார்கள். ஆனால் அது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தான். நெருக்கடி எப்போதும் இருக்கத்தான் செய்யும். அதை தனக்குள் எடுத்துக் கொண்டு இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மொத்தத்தில் எங்களது பேட்ஸ்மேன்கள் திறமைக்கு ஏற்ப ஆடவில்லை. 150 முதல் 160 ரன்கள் எடுத்துக் கொண்டு உள்ளூர் அணியை கட்டுப்படுத்த முடியாது. இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் டெஸ்டில் அனுபவம் இல்லாதவர்கள். இந்த தொடரின் மூலம் அவர்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
மேலும் அவரிடம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தோனி, இந்த தோல்வியை சமாளிக்க போதுமான அளவு வலிமையுடன் நான் இருக்கிறேனே அல்லது இல்லையா என்பதை தெரிந்து கொள்ள பொறுத்திருந்து பாருங்கள் என்றார். எனினும் அதிக அளவு 20 ஓவர் போட்டிகள் விளையாடுவதால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள தோனி மறுத்து விட்டார்.