Breaking News

திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு: ரன்வேயில் விமானம் சென்றபோது திடீரென எழுந்து ஓடிய வாலிபர்..



திருச்சி: விமானம் புறப்பட்டு ரன்வேயில் சென்றபோது, கழிப்பறைக்கு திடீரென ஓடிச் சென்றவரை தீவிரவாதி என்று நினைத்து பயணிகள் அலறியதால் மலேசியா விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு ஏர்ஏசியா விமானம் நேற்று காலை புறப்பட தயாராக இருந்தது. 

இந்த விமானத்தில் செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

காலை 10 மணிக்கு விமானம் புறப்பட்டு ரன்வே நோக்கி மெதுவாக நகர்ந்தது. அப்போது, விமானத்தில் இருந்த வாலிபர் ஒருவர், சீட்டில் இருந்து எழுந்து வேகமாக விமானத்தின் பின் பக்கம் திடீரென ஓடினார்.

அங்கிருந்த டாய்லெட்டுக்குள் அந்த வாலிபர் புகுந்து கொண் டார். 

இதனால் அதிர்ச்சி யடைந்த பயணிகள், மற்றும் விமான பணிப்பெண்கள் தீவிரவாதி என நினைத்து அலறினர். இதனால், விமானம் உடனடியாக ரன்வேயில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விமான பைலட், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, மீண்டும் விமான நிலையத்துக்கு விமானம் கொண்டு வரப்பட்டது. 

விமானத்திற்குள் சென்ற அதிகாரிகள் அந்த வாலிபரை கீழே இறக்கி விசாரித்தனர். கழிப்பறைக்கு அவசரமாக சென்றதாக கூறியதையடுத்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறி அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் 30 நிமிட தாமதத்துக்கு பின் மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றது. பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரத்தன்சிங் (30) என்பதும், டிராவல் விசாவில் மலேசியா செல்ல இருந்ததாகவும், விமானத்தில் ஏறிய உடன் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு ஓடியதாகவும் என்று தெரியவந்தது. 

இதன்பிறகு, விமான நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்ட போலீசார், வாலிபருக்கு மனநிலை நன்றாக இருப்பதாகவும், அவர் கோலாலம்பூர் செல்ல மாற்று விமானத்தில் ஏற்பாடு செய்து தரவும் கேட்டுக்கொண்டனர்.