Breaking News

வேலைக்காரர்களால் ஏற்படும் விபரீதங்கள்..






நகரங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டு வேலைகளுக்கு ஆட்களை நியமித்திருக்கிறார்கள். கணவரும், மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டியதிருப்பதால், வீட்டு வேலைகளை கவனிக்க வேலையாள் தேவைப்படுகிறார்கள். சில குடும்பங்களில் பெண்கள் நோயாளிகளாகவோ, ஆரோக்கியம் குறைந்தவர்களாகவோ இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வீடுகளிலும் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஓரளவு வசதிபடைத்தவர்கள்,  சமூக அந்தஸ்துக்காக வேலைக்கு ஆட்கள் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். 
எப்படியோ பல வீடுகளில், காலை நேரங்களில் வேலைக்காரர்கள் வராவிட்டால், அந்த வீடுகளின் இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்து போய் விடுகிறது. ஆனால் இந்த வேலைக்காரர்கள் விஷயத்தில் கவனமாக இல்லாவிட்டால் உயிர் சேதம், பொருட் சேதம், அவமானம் போன்ற  பலவித பாதிப்புகள் ஏற்பட்டு   விடுகின்றன.

இது ராஜஸ்தானில் நடந்த சம்பவம்: பரமேஷ்வர் என்ற வேலைக்காரர், டாக்டர் தம்பதிகளின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். கணவர், மனைவி இருவருமே பிசியான டாக்டர்கள் என்பதால் வீட்டை பார்த்துக் கொள்ளவும், பராமரிக்கவும் ஆள் தேவைப்பட்டது. அதற்கு பரமேஷ்வர் மிகவும் பொருத்தமாக இருந்தார். கனிசமான தொகையை கொடுத்து கிராமத்தில் இருந்து அவரை, வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவரும் எதிர்பார்த்ததுபோல் வேலையில் பம்பரமாய் சுழன்றார். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை ஓடிஓடி கவனித்தார்.

ஒருசில மாதங்களில் பரமேஷ்வருக்கு புதிய நபர் ஒருவன் அறிமுகமானான். அவன் பரமேஷ்வரோடு நெருக்கமான நட்பை ஏற்படுத்திக்கொண்டான். பின்பு அந்த வீட்டிற்குள் எந்த இடத்தில் நகை இருக்கிறது? எந்த இடத்தில் பணம் இருக்கிறது? என்பதை எல்லாம், பரமேஷ்வர் மூலம் அறிந்துகொண்டான்.

சமயம் பார்த்து ஒருநாள் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த விலைமதிப்பற்ற பொருட்களை எல்லாம் முகமூடி போட்டுக்கொண்டு கொள்ளையடித்தான். அதை தெரிந்துகொண்ட வேலைக்காரர் பரமேஷ்வர், அவனை பிடிக்க, பரிதாபம். அவன் பரமேஷ்வரை கொலை செய்துவிட்டு, பொருட்களோடு தப்பிவிட்டான்.

திருடர்கள் இப்படித்தான், முதலில் வீட்டு வேலைக்காரர்களிடம்தான் நட்பு பாராட்டுகிறார்கள். நட்புக்கும், அன்புக்கும் ஏங்கும் வேலைக்காரர்களும் அவர்கள் வலையில் விழுந்து, வேலை பார்க்கும் வீட்டு ரகசியங்களை எல்லாம் கொட்டிவிடுகிறார்கள். 

சில வீடுகளில் வேலைக்காரர்களை மூளைச் சலவை செய்து, அவர்களையும் சேர்த்துக்கொண்டும் திருடுகிறார்கள்.

‘உன் முதலாளி சுகபோகமாக வாழ்கிறார். கண்ட படி பணத்தை செலவு செய்கிறார். ஆனால் உனக்கு அதே சம்பளம்.. அதே அடிமை வாழ்க்கை. நீயும் மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டுகிறேன்’ என்று புதிய நண்பர்கள், வேலைக்காரர்களை மூளைச்சலவை செய்கிறார்கள்.

டெல்லியில் வசிக்கும் அனுபா, தனது அனுபவத்தை சொல்கிறார்:

“வேலைக்குப் போகும் எனக்கு ஒரு நல்ல வேலைக்காரன் கிடைத்தது வரபிரசாதம் என்று நினைத்து சந்தோஷப்பட்டேன். ஆனால் அவனோ குறுக்குப்புத்திக்காரனாக இருந்திருக்கிறான். எனக்கும் என் கணவருக்கும் அவ்வப்போது சிறுசிறு சண்டை நடக்கும். அதை எல்லாம் அவன் உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறான். காலப்போக்கில் என்னைப் பற்றி என் கணவரிடமும், என் கணவரைப் பற்றி என்னிடமும் போட்டுக் கொடுத்தான். சாதாரண விஷயத்தைக் கூட பெரிதாக்கி, எங்கள் இரு   வருக்குள்ளும் விரிசலை உண்டாக்கி விவாகரத்து வரை கொண்டுபோய்விட்டான். உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது என்று சொல்லுவார்களே அது இதுதான்.

எங்களுக்கு வெகு தாமதமாகத்தான் அவனது சுயரூபம் தெரிந்தது. அந்த உண்மை தெரிந்த பின்பு நாங்கள் இருவரும் பேசி சமாதானம் ஆகிவிட்டோம். அவனை தண்டிக்க முடியவில்லை. ஏனென்றால் அவன் தவறு செய்ய நாங்களும் துணைப் போயிருக்கிறோமே!” என்று வருத்தத்தோடு சொல்கிறார், அவர்.

வேலைக்காரர்களால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேலைக்காரர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தாய் வேலைக்கு சென்றுவிடும் நேரத்தில், வேலைக்காரர்களால் அந்த குழந்தைகள் அவஸ்தைபடுவது சில நேரங்களில் வேதனை தருவதாக அமைந்துவிடுகிறது. குழந்தைகளால் பேச முடியாது என்ற தைரியத்தில், துணிச்சலாக தவறு செய்கிறார்கள்.

மும்பையில் வங்கி ஒன்றில் பணிபுரியும் தம்பதியினர், தங்களது இரட்டை குழந்தைகள் எவ்வாறு கவனிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வதற்காக வீட்டில் ரகசிய கேமிராவை பொருத்தினார்கள். மறுநாளே அந்த அவல காட்சியை பார்த்து அதிர்ந்துபோனார்கள். தமது குழந்தைகள் பல நாட்கள் அந்த கொடுமையை அனுபவித்து வருவதை அறிந்து அழுதனர். அதையே ஆதாரமாகக்காட்டி அந்த கொடிய மனிதரை போலீசில் பிடித்துக்கொடுத்தார்கள். 

பெரும்பாலானவர்கள் தங்கள் சவுகரியத்திற்காக வேலைக்காரர்களை வைத்துக்கொள்ளும்போது, சிலர் கவுரவத்திற்காகவும் வேலைக்காரர்களை நியமித்துக்கொள்கிறார்கள். 

வெளி வேலை – வீட்டு வேலை இரண்டையுமே அந்த குடும்பத்தினரே கவனித்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். கணவரும், மனைவியும் ஒன்றுபட்டால் அதை செய்திட முடியும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எல்லாம் அதைத்தானே செய்கிறார்கள். 

லண்டனில் வசிக்கும் டாக்டர் பூர்ணிமா கூறுகிறார்..

‘‘இங்கு வேலைக்கு ஆள் கிடைப்பது கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் நமக்கு சமமாக அவர்களையும் நடத்த வேண்டும். சம்பளம் மிக அதிகம். நாம் வேலைக்குப் போய் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக அவர்கள் ஊதியம் கேட்பார்கள்.

நாம் வேலைபார்த்து வாங்கும் அதே அளவு சம்பளத்தை அவர்களுக்கு கொடுப்பதற்கு பதில் நாமே வீட்டு வேலைகளை செய்து முடித்துவிடலாமே என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம். அப்படிப்பட்ட முடிவுக்கு வரும்போது நமது வேலைகளை நாமே செய்துகொள்ள பழகிவிடுகிறோம். எங்கள் வீட்டு வேலைகளை நானும், என் கணவரும் சேர்ந்து செய்கிறோம். மூன்றாம் நபர்கள் நமது வாழ்க்கையில் மட்டுமல்ல, நமது வீட்டிலும் நுழையாமல் இருப்பது நல்லதுதான்..” என்கிறார்.  

மாநகரின் பல பகுதிகளில் இன்று வேலைக்கு ஆட்களை சேர்த்துவிடும் ஏஜென்சிகள் வந்துவிட்டன. அவர்கள் கிராமங்களில் வேலை தேடுபவர்களை கண்டறிந்து, மாநகரங்களுக்கு அழைத்துவருகிறார்கள். தேவைப்படுகிறவர்களின் வீடுகளுக்கு சம்பளம் பேசி அனுப்பிவைக்கிறார்கள். இதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் எல்லா துறைகளிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அது வேலைக்காரர்கள் விஷயத்திலும் பொருந்தும்.

இது பற்றி சமூக ஆர்வலர் குரு பிரசாத் சொல்கிறார்:

‘‘வேலைக்காரர்கள் கூர்மையான கத்தியைப் போன்றவர்கள். எந்த அளவுக்கு உபயோகமானவர்களோ, அந்த அளவுக்கு ஆபத்தானவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் அவர்களை குடும்பத்தில் ஒருவராக பாவித்து அன்போடு பழகவேண்டும்” என்கிறார்.


வேலைக்காரர்களின் தேவை நாளுக்கு நாள் பெருகுவதுபோல், அவர்களால் நிகழும் குற்றச்செயல்களும் பெருகிக்கொண்டேதான் இருக்கின்றன. அதில் வித்தியாசமான விபரீதம் ஒன்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

தனஞ்சய் சிங் என்பரின் மனைவி டாக்டர் ஜாக்ருதி. அவர் தனது வீட்டு வேலைக்காரனோடு தவறான தொடர்புவைத்துக்கொண்டார். அதனால் அந்த குடும்பத்திற்குள் பெரிய அசம்பாவிதங்கள் நடக்க, இப்போது அவர் சிறையில் வாடவேண்டியதாயிற்று.

No comments