பேஸ்புக் பற்றி வியக்க வைக்கும் புள்ளி விவரங்கள்!
மொபைலை நம்பினோர் கைவிடப்படார். - முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிடம் கேட்டால் இப்படி தான் சொல்வார். அதுவும் சந்தோஷமாகவே சொல்வார். ஏனெனில் மொபைல் மூலம் விளம்பர வருவாய் தான் பேஸ்புக்கிற்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பேஸ்புக்கின் இரண்டாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் படி பேஸ்புக்கின் வருவாய் 2.91 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் இணையான காலாண்டு வருவாயான 1.81 பில்லியன் டாலரை விட இது 61 சதவிதம் அதிகம் என்பது மட்டும் அல்ல, இதில் 62 சதவீதம் அதாவது 1.66 பில்லியன் டாலர் மொபைல் மூலமான விளம்பர வருவாயாகும். ஆக மொபைல் வாரிக்கொடுத்ததால் பேஸ்புக் வருவாயை அள்ளியிருக்கிறது.
இதில் விஷேசம் என்ன என்றால், பங்குச்சந்தையால் கணிகப்பட்ட வருவாயை விட பேஸ்புக்கின் வருவாய் அதிகமாக இருப்பது தான். விளைவு பேஸ்புக்குன் பங்கு விலையும் உயர்ந்திருக்கிறது. காலாண்டு முடிவு வெளியான அன்று பேஸ்புக்கின் பங்கு விலை 74 டாலருக்கு மேல் இருந்தது. இது வெறும் எண்ணிக்கை அல்ல; பங்கு விலை அடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பை கணக்கிட்டால் 190 பில்லியன் டாலர் வருகிறது.
இது மின்வணிக முன்னோடியான அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பான 165 பில்லியன் டாலரை விட அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஒரு கட்டத்தில் பழைய ஜாம்பவனான ஐ.பி.எம் நிறுவனத்தின் சந்தை மதிப்பையும் பேஸ்புக் மிஞ்சியதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு ஐ,பி.எம் மீண்டும் முந்திவிட்டது.ஆனாலும் கூட ஆப்பிள், கூகிள் மற்றும் ஐ.பி.எம் நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தில் பேஸ்புக் இருக்கிறது.
அது மட்டும் அல்ல, இந்த ஒரு நாள் பங்கு உயர்வு பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்கின் 1.6 பில்லியன் டாலர் அளவு உயர்த்தி 33 பில்லியன் டாலருக்கு கொண்டு சென்றது. ஒரு கணக்கு படி கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஜக்கர்பர்க் 16 வது இடத்தில் இருக்கிறார். கூகிள் நிறுவனர்கள் செர்ஜி பிரயன் மற்றும் லாரி பேஜ் 17 மற்றும் 18 வது இடத்தில் இருக்கின்றனர். ஆக ஜர்க்கர்பர்க் , கூகிள் நிறுவனர்களையும் முந்தியிருக்கிறார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு 20 வது இடம். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் (கேட்ஸ்) தான் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் டேவிட் கிர்க்பேட்ரிக் என்பவரோ , ஜக்கர்பர்க் உலகின் முன்னணி கோடிஸ்வராரக வருவர் என கணித்திருக்கிறார்.
இவர் பேஸ்புக் தொடர்பான தி பேஸ்புக் எபெக்ட் புத்தகத்தை எழுதியவர். இருந்தும் கேட்சை முந்த பேஸ்புக் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். பேஸ்புக்கின் சந்தை மதிப்பு 190 பில்லியன் டாலர் உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி, ஆப்பிள் நிறுவனம் இந்த நிலையை அடைய பல ஆண்டுகள் ஆனது, கூகிளுக்கு 5 ஆண்டுகள் ஆனது பேஸ்புக்கோ இரண்டு ஆண்டுகளில் சாத்திதிருக்கிறது என்று வர்ணிக்கப்படுகிறது.
2012 ல் பேஸ்புக் பங்குச்சந்தையில் நுழைந்ததை கொண்டு இவ்வாறு சொல்லப்படுகிறது. ஆனால் பேஸ்புக் பங்குச்சந்தையில் அறிமுகமான போது இருந்த நிலை வேறு. அப்போது பேஸ்புக் பங்கு விலை 38 டாலராக மட்டுமே இருந்தது. அதன் பங்கு வெளியீடு தோல்வி என வர்ணிக்கப்பட்டது. அது மட்டுமா? பேஸ்புக்கால் வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது ,அதைவிட கடினமானது அதிக வருவாய் ஈட்டுவது என்றெல்லாம் கூறப்பட்டது. பேஸ்புக்கில் இருந்து இளசுகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றனர் என கூறப்பட்டு பேஸ்புக் கதை முடிந்தது என்றும் கூறப்பட்டது. ஆனால் பேஸ்புக் கொஞ்சம் புத்திசாலித்தனமாக செல்போன்கள் பக்கம் நகர்ந்து தன்னை மீட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் போனின் எழுச்சி மற்றும் செல்லில் இணையததையும் அதன் முக்கிய அங்கமான பேஸ்புக்கை பார்ப்பதும் அதிகரிக்க பேஸ்புக் விமர்சனங்களை வென்றிருக்கிறது.
சரி, இப்போது பேஸ்புக்கின் மொத்த பயனாளிகள் என்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
1.32 பில்லியன் !. ஜூன் மாத கணக்கு படி தினமும் பேஸ்புக்கை 829 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 40 நிமிடம் பேஸ்புக்கில் செலவிடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். செல்போனில் இருந்து 654 மில்லியன் பேர் தினமும் ஒரு முறையேனும் பேஸ்புக் உள்ளே நுழைகின்றனர். வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக பேஸ்புக் புதிய வழிகளை தேடிக்கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப்பை வளைத்து போட்டது, மெய்நிகர் நிறுவனமான ஆக்குலஸ் ரிப்டை பெருந்தொகைக்கு வாங்கியது எல்லாம் இதற்காக தான். இவை தவிர ஆளில்லா விமாங்கள் மூலம் உலகில் இணையம் இல்லா பகுதிகளுக்கு இணையத்தை கொண்டு செல்வது போன்ற திட்டங்களையும் பேஸ்புக் வைத்திருக்கிறது.
பேஸ்புக்கின் வெற்றிக்கதையும் அது தரும் புள்ளி விவரங்களும் சுவாரஸ்யமானது தான். ஆனால் பேஸ்புக்கின் வெற்றிக்கதை சர்ச்சைகள் நிரம்பியதும் கூட. பேஸ்புக் பயனாளிகளை சேர்ப்பதிலும், அதை வைத்து வருமானம் குவிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறதே தவிர இணையவாசிகளின் அந்தரங்க மீறல் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்தில் பயனாளிகளுக்கு தெரியாமல் அவர்கள் மீது உளவியல் சோதனை நடத்தி பேஸ்புக் வாங்கி கட்டிக்கொண்டது. இந்த விமர்சனங்களை பேஸ்புக்கால் வெல்ல முடியுமா என்று தெரியவில்லை. பேஸ்புக் இணையவாசிகளை வளைத்து போட்டு எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லம் விளம்பரத்தை நுழைக்க பார்ப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் நிறைய விமர்சனங்களும் புகார்களும் உண்டு. பயனாளிகளின் ஸ்டேடஸ் அப்டேட்களையும் அவர்கள் பகிரும் லைக்குகளையும் வைத்து சம்பாதிக்கும் பேஸ்புக்கின் பல செயல்கள் அவர்களின் அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
நிற்க, ஆம் பேஸ்புக் நம்மை எல்லாம் வைத்து சம்பாதிக்கிறது என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா ? அப்படி என்றால் பேஸ்புக்கிறகு போட்டியாக வந்துள்ள புதிய வலைப்பின்னல் சேவை பபில்யூஸ் http://www.bubblews.com பற்றி தெரிந்து கொள்ளுங்கள். செல்வாக்கில் பேஸ்புக் பக்கம் நெருங்க முடியாவிட்டாலும் கூட கருத்தாக்கத்தில் இந்த தளம் பேஸ்புக்கிற்கு சவால் விடுகிறது.
அதாவது தனக்கு வரும் விளம்பர வருவாயை பயனாளிகளுடன் பகிர்ந்து கொள்வதாக சொல்கிறது. இந்த தளத்தில் உறுப்பினராகி கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் அதன் மீது வரும் ஒவ்வொரு கிளிக்கிற்கும் , கிடைக்கும் ஒவ்வொரு பின்னுட்டத்திற்கும் ஒரு பென்னி ( காசு) தருவதாக் சொல்கிறது. எல்லாம் சேர்த்து 50 டாலர் வந்தவுடன் அனுப்பி வைக்கப்படுமாம். நிச்சயம் இது ஒருவரை பணக்காராரக ஆக்காது, ஆனால் ஒரு சில டாலர்கள் வர வாய்ப்புண்டு.
இணைய உலகில் இப்போது இந்த தளம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதே போல போன்சோமீhttps://play.google.com/store/apps/details?id=com.bonzovideollc.BonzoVideo&hl=en எனும் செயலி வீடியோ பார்த்தால் ,பகிர்ந்து கொண்டால் விளம்ப்ர வருவாயை பகிர்ந்து கொள்வதாக சொல்கிறது. இவை அள்ளிக்கொடுக்காமல் போகலாம், ஆனால் பயனாளிகளுடன் வருவாய் பகிர்வு என்பது இணையவாசிகளை வைத்து பணம் சம்பாதிக்க மட்டுமே நினைக்கும் நிறுவனங்களில் இருந்து மாறுபட்ட கருத்தாக்கம் தானே. பார்க்கலாம் இவை எந்த அளவுக்கு வரவேற்பு பெறுகின்றன என்று!.