Breaking News

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி...


இரண்டாம் தலைமுறை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆடம்பர எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நியூயார்க் நகரில் அறிமுகம் செய்யப்பட்ட முந்தைய மாடலைவிட இந்த புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் 420 கிலோ எடை குறைவானது. கிரவுன்ட் கிளியரன்ஸ் 278 மி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் மேலும் 51 மி.மீ கூட்டிக்கொள்ளலாம். இதுதவிர, டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் கொண்டிருப்பதால் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக இருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். 3.0 லிட்டர் வி-6 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல் 292 எச்.பி ஆற்றலையும், 600 என்.எம் டார்க்கையும் அளிக்கும். 5.0 லிட்டர் வி-8 இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல் 510 எச்.பி ஆற்றலையும், 625 என்.எம் டார்க்கையும் வழங்கும். 0-100 கிமீ வேகத்தை டீசல் மாடல் 7.2 வினாடிகளிலும், பெட்ரோல் மாடல் 5.3 வினாடிகளிலும் தாண்டிவிடும்.

இந்த காரில் இருக்கும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் காரின் இயங்குநிலையை தொடர்ந்து கண்காணித்து சென்ட்ரல் கன்சோலில் பொருத்தப்பட்டிருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் திரை வழியாக டிரைவருக்கு தகவல்களை தொடர்ந்து வழங்கும். சில சமயம், தண்ணீர் அல்லது ஆறுகளை கடக்கும்போது எவோக் காரின் ரியர் வியூ கண்ணாடிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் தண்ணீரின் அளவு அபாயகரமாக உள்ளதா என்பதை டிரைவருக்கு தெரிவிக்கும். எவோக் கார் 500 மி.மீ வரை தண்ணீருக்குள் செல்லும். அதற்கு மேல் சென்றால் இந்த கருவி எச்சரிக்கும். காரை சுற்றிலும் பொருத்தப்பட்டிருக்கும் 5 டிஜிட்டல் கேமராக்கள் மூலம் 360 டிகிரி கோணத்தில் காரை சுற்றிலும் இருக்கும் பொருட்களை கண்காணித்து ஓட்ட முடியும். 

இது, போதுமான வெளிச்சம் இல்லாத நேரத்திலும், இரவு பயணங்களிலும் மிகச்சிறப்பான பயன்தரும். நம் கவனத்துக்கும், கண்களுக்கும் தெரியாத பகுதிகளை காரின் பக்கவாட்டில் இருக்கும் ரேடார் சென்சார்கள் கண்காணித்து ரியர் வியூ கண்ணாடியில் இருக்கும் ஃப்ளாஷ் விளக்கு மூலம் எச்சரிக்கை செய்யும். காரின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் குறித்த எச்சரிக்கையையும் பெறலாம். பார்க்கிங் அல்லாத பகுதிகளிலும், சாலைகளிலும் காரை பின்புறம் நகர்த்தும்போது பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் பொருட்கள் குறித்து வாய்மொழியாகவும், திரை வழியாகவும் எச்சரிக்கை தகவல்களை கொடுக்கும் வசதி இதில் இருக்கிறது. 

காரில் இருக்கும் 8 இஞ்ச் டச் ஸ்கிரீன் மூலம் காரின் தற்போதைய எரிபொருள் சிக்கனம், எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான தகவல்கள் போன்றவற்றை வழங்கும். அதற்கான வழிகாட்டு முறைகளையும் டிரைவருக்கு தெரிவிக்கும். இதன்மூலம், ஓட்டுனரின் ஓட்டுதல் திறன் மேம்படும். டீசல் மாடல் லிட்டருக்கு 13.33 கி.மீ மைலேஜ், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 7.8 கி.மீ மைலேஜ் தருகிறது. பெட்ரோல் மாடல் ரூ.1.66 கோடி விலையிலும், டீசல் மாடல் ரூ.1.1 கோடி விலையிலும் (மும்பை எக்ஸ்ஷோரூம்) கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை