டிசம்பர் 1ம் தேதி முதல் தேயிலை தூள் ஆன்லைனில் ஏலம்..
பான் இந்தியா திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் தேயிலை தூள் ஏலம் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) தலைவர் விஜயன் ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:தேயிலை தூள் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து தென்னிந்தியாவில் சராசரியாக கிலோ ஒன்றுக்கு ^87 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வால், ஒரு கிலோ தேயிலை தூள் உற்பத்தி செய்ய ரூ.175 வரை செலவு ஏற்படுகிறது.
கால நிலை மாற்றம், ஏற்றுமதி குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் தேயிலை தொழில் வெகுவாக பாதித்துள்ளது.தேயிலை ஏற்றுமதியை பொறுத்தவரை கென்யா, சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அடுத்து 4வது இடத்தில் இந்தியா உள்ளது. வரும் நாட்களில் ஏற்றுமதியை அதிகரிக்க தேயிலை வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 5ம் இடத்திலுள்ள வியட்நாம் 4ம் இடத்தை பிடித்து விடும்.
இந்திய தேயிலை உற்பத்தியில் தென்னிந்தியாவில் 20 சதவீத உற்பத்தி மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்றுமதி இந்தாண்டு 35 சதவீதத்திற்கு குறைவாக தான் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இது 50 சதவீதமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் ஏற்றுமதியாளர்கள் அதிகம் விரும்பும் ஆர்த்தோ டெக்ஸ் ரக தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது தான். டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் உபாசி மூலம் ஆன் லைன் உதவியுடன் பான் இந்தியா திட்டத்தின் கீழ் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தேயிலை தூளின் விற்பனை அளவும் உயரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு விஜயன் ராஜேஷ் கூறினார்.