Breaking News

2015 புத்தாண்டு பரிசாக சென்னை நகர மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம்.!



”சென்னையில் கோயம்பேடு-ஆலந்தூர் வரையிலான முதல்கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் டிசம்பர் மாதம் முடிவடையும். புத்தாண்டு பரிசாக சென்னை நகர மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம். திருவொற்றியூர் வரை நீட்டிக்க மத்திய அரசு விரைவில் நிதி வழங்கும். மோனோ ரெயில் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.” என்று மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.



சென்னையில், ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, 45.1 கி.மீ. தொலைவுக்கு 2 வழித் தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை- சென்னை விமான நிலையம் இடையே, 23.1 கி.மீ. தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல்- பரங்கிமலை இடையே 22 கி.மீ. தொலைவுக்கு 2-ஆவது வழித்தடமும் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் ஆய்வு: கோயம்பேடு- ஆலந்தூர் இடையிலான வழித்தடத்தில், மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம், கடந்தாண்டு இறுதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதலில் கோயம்பேடு- அசோக்நகர் இடையிலும், பின்பு கோயம்பேடு- பரங்கிமலை இடையிலும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய ரயில்வே அமைச்சகத்தின் ஆராய்ச்சி வடிவமைப்பு, தர நிர்ணய அதிகாரிகள் ஜூன் மாதம் சென்னை வந்தனர். அவர்கள் மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் கோயம்பேடு- ஆலந்தூர் இடையிலான சோதனை ஓட்டத்தில் பங்கேற்று ஆய்வு செய்தனர். இந்தச் சோதனை ஓட்டத்தில், குறைந்தப்பட்சம் 10 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்திலும் வேகத்திலும் மெட்ரோ ரயில் இயக்கிப் பார்க்கப்பட்டது. இந்த ஓட்டத்தின்போது, மெட்ரோ ரயிலின் ஸ்திரத்தன்மை, சிக்னலுக்கு தகுந்தவாறு இயங்கும் திறன், ரயிலின் மின்னோட்டத்தின் அளவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சோதித்துப் பார்க்கப்பட்டன. இந்தச் சோதனை, திருப்திகரமாக இருந்ததாக ஆராய்ச்சி வடிவமைப்பு, தர நிர்ணய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோயம்பேடு- ஆலந்தூர் வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயிலை இயக்கலாம் என வேக அங்கீகாரச் சான்றிதழ் தற்போது வழங்கப்பட்டுள்ள நிலையில் .புத்தாண்டு பரிசாக சென்னை நகர மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம்.” என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.