சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 3 கிலோ தங்கம் கடத்தி வந்த 7 பெண் குருவிகள் சிக்கினர் !
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 7 பெண்களிடம் இருந்து 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் ரூ.13 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் கடந்த மாதம் வரை ரூ.45 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் தான் கடத்தல் சம்பவங்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தின் சுங்கச் சோதனை பிரிவு ஆணையர் அகர்வால், விமான நிலைய சுங்கத்துறை உளவு பிரிவு உதவி ஆணையர் உள்பட பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, புதிய அதிகாரிகள் நியமித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதனால் தங்கம் கடத்தும் கும்பல், புதிய டெக்னிக்கை பயன்படுத்த முடிவு செய்தனர். ஆண் கடத்தல் குருவிகளுக்குப் பதிலாக, பெண் கடத்தல் குருவிகளை அனுப்புவதுதான் அந்த டெக்னிக். சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து, ஒரே நாளில் 7 பெண் கடத்தல் குருவிகளை பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடி 5 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று இரவு 11.45 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன் விமானம் சென்னை வந்தது. இதில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னை அசோக்நகரை சேர்ந்த ராணி (43) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர் சுற்றுலா பயணியாக மலேசியா சென்று வந்துள்ளார். சந்தேகத்தின் பேரில், அவரை பெண் அதிகாரிகள் தனி அறையில் வைத்து சோதனை நடத்தினர். அப்போது ராணி தனது உள்ளாடையில், 14 தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்தது தெரிய வந்தது. ஒவ்வொன்றும் 100 கிராம் எடை கொண்டது. மொத்தம் ஆயிரத்து 400 கிலோ கட்டிகள். இதன் சர்வதேச மதிப்பு ரூ.42 லட்சம். இதையடுத்து ராணியை கைது செய்து அவரிடம் இருந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல், சிங்கப்பூரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று சென்னை வந்தது. அதில் வந்த பயணிகள் சோதனை செய்த போது, இலங்கை சேர்ந்த வடிவழகி (48), பிங்காரா (40), சிவகங்கையை சேர்ந்த மாரியம்மாள் (50), ஜீனத் (38) ஆகியோர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் நான்கு பேரும் ஆசன வாயில் சின்ன, சின்ன பாக்கெட்டுகளாக தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வடிவழகியிடம் 300 கிராம், பிங்காராவிடம் 350 கிராம், மாரியம்மாளிடம் 400 கிராம், ஜீனத்திடம் 500 கிராம் என மொத்தம் 1,550 கிலோ எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.45 லட்சம். நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த கனியம்மாள் (39), பேகம்(54) ஆகியோரை சோதனை செய்தனர். கனியம்மாள் வைத்திருந்த செல்போனில் தங்கத்தினாலான பேட்டரி பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேட்டரியின் மொத்த எடை 250 கிராம்.
இதன் மதிப்பு ரூ.7.5 லட்சம். மேலும், பேகம் தன்னுடைய கைப்பையில் 100 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட்டை கருப்பு பெயிண்ட அடித்து மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். இதன் மதிப்பு ரூ.9 லட்சம். ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் சுங்க அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி சோதனையில் ஏழு பெண்களிடம் இருந்து ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் எல்லோருமே கடத்தல் குருவிகள் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இந்த 7 பெண்களும் கடத்தலில் ஈடுபடுவது இதுதான் முதல் முறை. இவர்களை கடத்தலில் ஈடுபடுத்திய ஆசாமிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.