5 முக்கிய திட்டங்களுக்கு ஆதார் மூலம் மானியம் 300 மாவட்டங்களில் முதல் கட்டமாக அமலாகிறது..
ஆதார் எண் மூலம் 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இதன்மூலம், சமையல் எரிவாயு மானியத்தை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதன்பிறகு ஆதார் அட்டையை எந்த திட்டத்தின் பலனை பெறுவதற்கும் கட்டாயமாக ஆக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
பின்னர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. கட்டாயம் இல்லை என்றதால் இதை எடுப்பதற்கு மக்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை. மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும், பாஜ ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதோடு, ஆதார் மூலமான திட்டங்களை பாஜ செயல்படுத்தாது என்ற கருத்து கூறப்பட்டது.
இந்நிலையில், ஆதார் அட்டை மூலம் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்குவது மற்றும் அதன் மூலம் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. இதுவரை சுமார் 67.4 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை இதற்கு சுமார் ரூ.4,906 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை மூலம் மானிய தொகையை வங்கிகளில் நேரடியாக செலுத்தும் நடைமுறையை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்த முடியும் என பிரதமர் நம்புவதாக அரசு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே, முந்தைய அரசு முடிவின்படி 5 முக்கிய திட்டங்களுக்கு ஆதார் அட்டை மூலம் பலன்கள் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கேற்ப ஆதார் தடை உத்தரவில் மாற்றங்கள் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளது.இதன்படி, சமையல் எரிவாயு மானியம், முதியோர்/ விதவை/ ஆதரவற்றோர் உதவி தொகைகள், கல்வி உதவித்தொகை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது விநியோக திட்டங்களின் பலன்கள் வங்கி கணக்கு மூலம் ஆதார் அட்டை விவரங்களுடன் இணைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.
திட்ட கமிஷன் மதிப்பீட்டின்படி தற்போது ஆதார் திட்டத்தின்படி மாநிலங்களுக்கு ஏற்ப 25 முதல் 60 சதவீதம் வரை மானிய தொகை வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. இதை 80 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக 300 மாவட்டங்களில் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்துக்கு பிறகு ஆதார் திட்ட செயல்பாடுகளில் மத்திய அரசு வேகம் காட்டி வருகிறது. இவ்வாறு நேரடியாக மானியம் வழங்குவதன் மூலம் எரிபொருளுக்காக வழங்கும் அரசு மானியம் 20 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் மானிய செலவாக ரூ.63,427 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.