Breaking News

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிளிப் கார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி அபராதம்?

                     

ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனம், ‘பிளிப் கார்ட்’. இந்த நிறுவனம் சமீபத்தில் அதிரடி தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. ஒரே நாளில் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி குவித்தனர். இதன் மூலம் இந்த நிறுவனம் ரூ.600 கோடியை அள்ளியது.

இது தொடர்பாக மத்திய தொழில், வர்த்தகத்துறைக்கு மற்ற நிறுவனங்கள் புகார் செய்தன.

இது தொடர்பாக அந்த துறையின் மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியபோது, அவர், “அரசு இது தொடர்பாக ஏராளமான புகார்களை பெற்றுள்ளது. இது குறித்து ஆராய்வோம்” என உறுதி அளித்தார்.

இந்த நிலையில் பிளிப் கார்ட் நிறுவனத்துக்கு, நிதி மோசடி குறிப்பாக சட்ட விரோத பண பரிவர்த்தனை, அன்னியச்செலாவணி விதி மீறல்பற்றிய விவகாரங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கிற மத்திய அமலாக்கப்பிரிவு, ரூ.1,000 கோடி அளவுக்கு அபராதம் விதிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்த நிறுவனத்தின் விதிமீறல்களின் அளவு கணக்கிடப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக அபராதம் விதிப்போம். நாங்கள் பிளிப் கார்ட் நிறுவனத்தின் மூலம் பாடம் கற்றுக்கொண்டோம். இதனால் மற்ற நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்கிறோம். அவர்கள் உஷாராகி விடுவார்கள் என்பதால் இப்போது அதுபற்றி ஏதும் கூற முடியாது” என்றார்.

ஆனால் பிளிப் கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், “இந்த நாட்டின் சட்டத்தின்படிதான் நாங்கள் செயல்படுகிறோம். தேவைப்படுகிறபோது, அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம்” என்று கூறினார்.