கரை கடந்தது ‘ஹூட்ஹூட்’ புயல் சீர்குலைந்தது விசாகப்பட்டினம்; 195 கி.மீ வேகத்தில் சூறாவளி: 6 பேர் பரிதாப பலி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே, நேற்று முற்பகல் 11 மணியளவில் ஹூட் ஹூட் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. தொலைத்தொடர்பு இணைப்பு முற்றிலும் சீர்குலைந்தது. போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மொத்தத்தில் ஹூட் ஹூட் புயல், விசாகப்பட்டினத்தை தலைகீழாக புரட்டிப்போட்டது. கடல் அலைகள் ஒன்றரை மீட்டர் உயரத்திற்கு எழுந்தன. குடிசை வீடுகள் கீற்றுகள் காற்றில் பறந்தன.
சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சாலையில் விழுந்து சிதைந்தன. வீடு இடிந்தது, மரம் சாய்ந்தது, கனமழைக்கு இதுவரையில் 6 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் 3 பேரும் ஒடிசாவில் 3 பேரும் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து, புயலாக உருவானது. இதற்கு ஹூட் ஹூட் என பெயரிடப்பட்டது. இந்தப் புயலானது, ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என்றும், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசி சேதத்தை ஏற்படுத்தும் எனவும் வானிலை மையம் முன்னெச்சரிக்கை செய்திருந்தது. இதையடுத்து, இரு மாநிலங்களின் கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கையாக முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் முதலே, கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கரையை கடந்தது: இந்நிலையில், நேற்று முற்பகல் 11 மணியளவில் விசாகப்பட்டினம் அருகே கைலாசகிரி என்ற இடத்தில் புயல் கரையை கடந்தது. அதைத் தொடர்ந்து ஆந்திரா, ஒடிசா கடலோர மாவட்டங்களில் 170 - 180 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. சில இடங்களில் 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், மரங்கள் வேருடன் சாய்ந்தன. குடிசை வீடுகள் பல காற்றில் பறந்தன. மின் கம்பங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவை சாய்ந்து விழுந்தன. கேபிள், மின்சார வயர்கள் உள்ளிட்டவை துண்டானது. ஆந்திரா அதிர்ந்தது: சூறைக்காற்று தாக்கியதில் ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து விழுந்ததால், வீட்டுக்குள் இருந்தவர்கள் அலறத் தொடங்கினர். விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஆகிய 3 மாவட்டங்களில் தகவல் தொடர்பு, மின்சாரம் உள்ளிட்டவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. 195 கி.மீ. வேகத்தில் வீசிய புயல், துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தை சூறையாடியது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சாலையில் விழுந்து உருண்டன. புயல் காற்று வீசியது இடி முழக்கம் போல இருந்ததாக விசாகப்பட்டின மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். ஆந்திராவில் புயல்காற்று மற்றும் கனமழையில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். புயலின் வேகம் குறைந்தால் மட்டுமே மீட்பு பணியில் ஈடுபட முடியும் என்பதால், நிலைமை மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. 300 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உணவு உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது. ஒடிசாவில் சேதம்: ஒடிசாவிலும் அதிவேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன், கனமழையும் பரவலாக பெய்தது. நிலச்சரிவு மற்றும் மரம் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கையாக, வெளியேற்றப்பட்டுள்ள கடலோர பகுதி மக்கள் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ஒடிசா பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமைகளை கண்காணித்து வருவதாக ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் தெரிவித்துள்ளார். வானிலை அறிவிப்பு: அடுத்த 2 நாட்களுக்கு விசாகப்பட்டினத்தில் பலத்த மழை பெய்யும் என்றும், ஹூட்ஹூட் புயலால் சட்டீஸ்கர், பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேங்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. இதற்கிடையே புயலின் தீவிரத்தையும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பிரதமர் அலுவலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. 7 பெண்களை காப்பாற்றியவர் பலி: ஹூட்ஹூட் புயலின்போது, கர்ப்பிணி பெண், 6 பெண்கள் உட்பட 8 பேர் ஒரிசாவின், கேந்திரபரா பகுதியில், முதலைகள் உள்ள நீர்நிலைக்குள் மாட்டிக்கொண்டு தவித்தனர்.
ஒருபுறம் புயலும், மறுபுறம் முதலைகள் தாக்கக்கூடும் என்ற அச்சம் அவர்களை வதைத்தது. இதனைக் கண்ட சகாதேவ் சமால் (40), என்பவர் தனக்கு நேர்ந்த நிமோனியா காய்ச்சலையும் பொருட்படுத்தாது, நீர்நிலைக்குள் இறங்கி, 8 பேரையும் காப்பாற்றி கரை சேர்த்தார். இருப்பினும், நோய் தீவிரம் அடைந்ததால், சிகிச்சை பலனின்றி சகாதேவ் உயிரிழந்தார்.
பிரதமர் உறுதி
புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என மோடி உறுதியளித்துள்ளார். பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசிய, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புயல் தாக்குதலை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.