Breaking News

பருவமழை தொடங்கியது : 8 மணி நேர மழைக்கே சென்னை தத்தளிப்பு

      

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று 8 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வந்தது. இதன் காரணமாக தமிழகத்திலும் மழை பெய்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஹூட் ஹூட் புயல் உருவாகி ஆந்திராவில் கரை கடந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியது. இதையடுத்து, தமிழகத்தில் வறண்ட வானிலை காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு, வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திடீரென மழை பெய்தது.

சென்னையை பொறுத்தவரை நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 10 மணிக்கு பலத்த மழை கொட்ட தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து மாலை 6 மணி வரை, அதாவது சுமார் 8 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. மயிலாப்பூர், சாந்தோம், ராயப்பேட்டை, அண்ணாசாலை, எழும்பூர், சென்ட்ரல், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. முக்கிய சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. இதனால், பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு  தண்ணீர் தேங்கியது. இதனால், வாகனங்களில் சென்றவர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினர். வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியபடி சென்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுரங்கங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்தும் தடைபட்டது.
மாலையும் மழை நீடித்ததால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சென்று திரும்பியவர்கள் மழையில் நனைத்தபடி வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தி.நகர், புரசைவாக்கத்தில் பெய்த மழை யால் தீபாவளிக்கு துணி எடுக்க வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை தீவுத்திடல், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தீபாவளி பட்டாசு விற்பனையும் பாதிக்கப்பட்டது.

மழையால் திருமங்கலத்தில் கார் மீது மரம் முறிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இதே போல், கீழ்ப்பாக்கம் கெங்கை அம்மன் கோயில் தெரு, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, மேடவாக்கத்திலும் மரங்கள் முறிந்து விழுந்தன. இதே போல, வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதியில் நல்ல மழை பெய்தது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் வறண்ட வானிலை காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் 60 மிமீ மழை பெய்துள்ளது. சாத்தான் குளம், தொண்டி,  ஆர்.எஸ்.மங்கலம், சிதம்பரம் 50மிமீ, மயிலாடி, வாடிப்பட்டி, சங்ககிரி, ஒட்டப்பிடாரம் 40 மிமீ, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், பெரியாறு, கழுகுமலை, ராதாபுரம், வேடச்சந்தூர், கன்னியாகுமரி, கமுதி 30 மிமீ, கடலூர், கொடுமுடி, மானாமதுரை, சேரன்மாதேவி, பூதப் பாண்டி, ஆலங்காயம், திருப்பூர், ஆரணி, பரமக்குடி, சேத்தியாதோப்பு, கோவில்பட்டி, 20 மிமீ மழை பெய்தது.

நேற்று முன்தினம் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் வங்கக் கடலில் உருவான காற்று சுழற்சி மேலும் வலுவடைந்து காற்றழுத்தமாக மாறும் நிலையில் உள்ளது. இந்நிலையில், தெலங்கானா, வடக்கு கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதே நேரம் வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்யும். மேலும், கேரளா, ஆந்திராவை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.  இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.