வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு ஐ.பி.எல். போட்டியில் தடை?
வெஸ்ட்இண்டீஸ் அணி இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:–
8–வது ஐ.பி.எல். போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் பங்கேற்பது குறித்து ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவில் விவாதிக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு சீசனிலாவது அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்களில் சிலர் விரும்புகின்றனர். கிறிஸ் கெய்ல், போல்லார்ட், பிராவோ போன்ற வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல். போட்டி மூலம் தான் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தியா மூலம் தான் அவர்கள் புகழின் உச்சத்துக்கு சென்றனர்.
இந்திய ரசிகர்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு கற்பனைக்கு எட்டாதது. அப்படி இருக்கையில் அவர்கள் முதுகில் குத்துவிட்டனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு கொச்சியில் கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேலிடம் உத்தரவாதம் அளித்து இருந்தனர். தற்போது அதில் இருந்து பின்வாங்கிவிட்டனர். வர்த்தக நோக்கத்துக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கும்போது, நாம் ஏன் அவர்களுக்கு தடை விதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.