உலககோப்பை போட்டியில் கேப்டனாக இருக்க விரும்பவில்லை: மிஸ்பா-உல்–ஹக் அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியிலும் தோற்று தொடரை இழந்தது.
இந்த தோல்வியால் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா–உல்–ஹக் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார். மோசமான பேட்டிங் காரணமாக 3–வது போட்டியில் அவர் தானாக முன் வந்து விளையாடாமல் ஒதுங்கினார். இதனால் அப்ரிடி கேப்டனாக பணியாற்றினார்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை வரை மிஸ்பா கேப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் உலக கோப்பையில் தான் பாகிஸ்தான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்றும், அதற்கான வாய்ப்புகளும் இல்லை என்றும் மிஸ்பா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:–
சமீபகாலமாக என்னால் அதிகமாக ரன்னை எடுக்க முடியவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதது எனக்கே நன்றாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், நாட்டையும் மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
பாகிஸ்தான் அணியை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ள விரும்பவில்லை. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரைவில் முடிவு எடுக்க வேண்டும். அணியில் கேப்டனாக நீடிக்க எனக்கு விருப்பம் இல்லை.
இவ்வாறு மிஸ்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகாரியாகான் கூறியதாவது:–
உலககோப்பை வரை மிஸ்பா கேப்டனாக இருப்பார் என்று வாரியம் முடிவு எடுத்துள்ளது. இதற்கு பிறகும் அவர் வேறு முடிவு எடுப்பது அவரது கையில் உள்ளது. அவர் சரியாக ஆடவில்லை என்று நாங்கள் எப்போதும் குறை கூறியது இல்லை.
மிஸ்பா அணிக்கு தலைமை வகித்தால் அவருக்கு அனைத்து வகையிலும் கிரிக்கெட் வாரியம் உதவிகரமாக இருக்கும். அதே நேரத்தில் நாங்கள் எந்த வகையிலும் அவரை கட்டாயப்படுத்தவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடாமல் இருந்தது. அவரின் முடிவு தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.