பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைந்தது
சர்வதேச சந்தையில் முன் எப்போதும் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. அன்று நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 68 பைசா குறைந்து ரூ.70.87 ஆனது.
இந்த நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 88 டாலருக்கு (சுமார் ரூ.5 ஆயிரத்து 368) விற்பனை ஆகிறது. இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த விலை ஆகும். இதன் காரணமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை மீண்டும் குறைத்துள்ளன.
அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.28 நேற்று நள்ளிரவு முதல் குறைந்தது. டெல்லியில் லிட்டருக்கு ரூ.1.21-ம், கொல்கத்தாவில் ரூ.1.25-ம், மும்பையில் ரூ.1.27-ம் விலை குறைந்தது.
டீசலை பொறுத்தமட்டில், லிட்டருக்கு ரூ.2.50 வரை விலை குறையலாம். ஆனால் இதுகுறித்த அறிவிப்பு உடனே வெளிவராது.
மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் ஓட்டு எண்ணிக்கை 19-ந் தேதி நடந்து, அதுதொடர்பான தேர்தல் கமிஷனின் நடைமுறைகள் 22-ந் தேதி முடிந்த பின்னர் டீசல் விலை குறைப்புக்கான அறிவிப்பு வெளியாகும்.
டீசல் விலையை மாற்றி அமைக்கும் அதிகாரம் மத்திய அரசின் கையில்தான் உள்ளது. கடைசியாக 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி டீசல் விலை குறைக்கப்பட்டது. அப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.30.86 என்ற விலைக்கு விற்கப்பட்டது. அதன்பின்னர் சர்வதேச விலைக்கு ஏற்பவும், 2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மாதம் 50 பைசா வீதம் உயர்த்தப்பட்டும் வந்தது.
எனவே 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் டீசல் விலையை குறைக்கும் சூழல் உள்ளது. எனவே 22-ந் தேதிக்கு பின்னர் டீசல் விலை குறைப்பு குறித்த அரசின் அறிவிப்பு வெளியாகும். டீசல் விலை குறைக்கப்பட்டால் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல் விலை குறைப்புக்கு தேர்தல் நடைமுறைகள் பொருந்தாது. ஏனென்றால் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையை மாற்றியமைக்கும் பொறுப்பு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் தான் இருக்கிறது.
இதற்கிடையே மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதானிடம், டீசல் விலை குறைப்பு பற்றி டெல்லியில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்போம்” என பதில் அளித்தார்.