Breaking News

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள ‘சேஃப்டி செக்’ : இயற்கை பேரிடரின்போது பயனர்களுக்கு உதவும்

   

‘சேஃப்டி செக்’ என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இயற்கை பேரிடரின்போது பயனர்களுக்கு உதவும் வகையில் இந்த புதிய பாதுகாப்பு அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் எந்த மூலையில் இருப்பவரையும் இணைக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் இத்தகைய நிலைமைக்குத் ‘சேஃப்டி செக்’ என்ற புது அம்சம் மூலம் தீர்வு கண்டுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் கணக்கில் தந்துள்ள தகவல்களின் அடிப்படையில், இயற்கை பேரிடர் நிகழ்ந்துள்ள இடம் பற்றி தெரிந்த பின்னர், முறையே அந்தந்த இடங்களில் வசிக்கும் பயனர்களுக்கு “நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?” என்ற கேள்வியை இந்த அம்சம் எழுப்பும்.

இதற்கான உங்கள் பதில், உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்படும். உங்கள் நண்பர்களும் உங்கள் பாதுகாப்பு நிலை குறித்து உங்கள் சார்பாக பதில் சொல்லலாம். இந்த செய்தி உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிரப்படும். அதே போல, சுற்று வட்டாரத்திலுள்ள உங்கள் நண்பர்களது பாதுகாப்பு குறித்தும் உங்களுக்கு தெரிவிக்கப்படும். 

இந்த வசதி மூலம் நீங்கள் தெரிவிக்கும் செய்தியை உங்கள் நண்பர்கள் மட்டுமே பார்வையிடக்கூடும். 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியைத் தொடர்ந்து லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அப்போது சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை கவனித்த ஜப்பானைச் சேர்ந்த பேஸ்புக் ஊழியர்கள் இந்த அம்சம் உருவாக காரணமாக இருந்துள்ளார்கள்.