இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் ஆதார் அட்டை..
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் பதிவு செய்யும் அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்படும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு தனி நபரின் புகைப்படம், கைரேகைப் பதிவுகள் மற்றும் விழித்திரை பதிவு செய்யும் பணி மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இப்பணியை தமிழக மக்கள் கணக்கெடுப்புப் பணி இயக்குநர் கவனித்து வருகிறார்.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.21 கோடி. அதில், பயோமெட்ரிக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டி தேர்வு செய்யப்பட்ட மொத்த நபர்கள் 6.74 கோடியாகும். கடந்த ஜூலை 15ம் தேதி வரை 4.91 கோடி பேருக்கு பதிவுப் பணி மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் எஞ்சியுள்ளவர்களுக்கும் பதிவு பணிகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை பயோமெட்ரிக் பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 4,91,21,344 நபர்களில் இதுவரை 4,64,83,150 நபர்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளவர்களுக்கு பதிவு பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து தமிழக மக்கள் கணக்கெடுப்புப் பணி அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆதார் அட்டை வழங்குவதற்கான புகைப்படம், கைரேகைப்பதிவுகள், கண் விழித்திரை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது இப்பணி அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் மேல் முடிக்கப்பட்டிருக்கிறது. பிற மாவட்டங்களில் இந்த பணி விரைவாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இதுவரை 94.62 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதார் அட்டைகள் வழங்க அந்தந்த மாவட்ட தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.