Breaking News

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் சதம் மற்றும் 10 விக்கெட்: வங்காளதேச வீரர் ஷகிப் அல்–ஹசன் புதிய சாதனை

                               

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் சதத்துடன் மொத்தம் 10 விக்கெட்டுகளும் வீழ்த்தி வங்காளதேச ஆல்–ரவுண்டர் ஷகிப் அல்–ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார்.

வங்காளதேசம் வெற்றி
வங்காளதேசம்–ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குல்னாவில் கடந்த 3–ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேசம் 433 ரன்களும், ஜிம்பாப்வே 368 ரன்களும் குவித்தன. 65 ரன் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 4–வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு 20 ஓவர்கள் பேட் செய்த வங்காளதேசம் 9 விக்கெட்டுக்கு 248 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 314 ரன்கள் ஜிம்பாப்வேக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
‘டிரா’ செய்யும் முனைப்புடன் 2–வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே, வங்காளதேசத்தின் சுழலில் சிக்கி திணறியது. மசகட்சா (61 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். முடிவில் ஜிம்பாப்வே 51.1 ஓவர்களில் 151 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 162 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த வங்காளதேச அணி தொடரையும் 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் அல்–ஹசன் 44 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளும், தைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், ஜூபைர் ஹூசைன் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அல்–ஹசன் சாதனை
முன்னதாக ஆல்–ரவுண்டர் ஷகிப் அல்–ஹசன் முதலாவது இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை அள்ளியிருந்தார். அத்துடன் முதலாவது இன்னிங்சில் அவர் சதமும் (137 ரன்) விளாசி இருந்தார்.
137 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன், அதில் சதமும் அடித்த 3–வது வீரர் என்ற அரிய பெருமையை ஷகிப் அல்–ஹசன் பெற்றார். முன்னதாக இங்கிலாந்தின் இயான் போத்தம் ( 114 ரன், மொத்தம் 13 விக்கெட்) 1980–ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானின் இம்ரான்கான் (117 ரன், 11 விக்கெட்) 1983–ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராகவும் இச்சிறப்பை பெற்றிருந்தனர். ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இச்சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் தடவையாகும்.

முன்பே தெரியும்
27 வயதான ஷகிப் அல்–ஹசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இப்படியொரு சாதனை இருப்பதை சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகையார் ஒருவர் என்னிடம் கூறியிருந்தார். நாமும் அச்சாதனை பட்டியலில் இணைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டேன். அதிர்ஷ்டவசமாக இந்த டெஸ்டிலேயே அதை செய்திருக்கிறேன்’ என்றார்.

வங்காளதேசம்–ஜிம்பாப்வே இடையிலான 3–வது டெஸ்ட் போட்டி வருகிற 12–ந்தேதி சிட்டகாங்கில் தொடங்குகிறது.