கூரைமீது படுத்து பயணம் செய்த வாலிபர் திருச்சியில் கண்டுபிடித்து ஒரு மணி நேரம் போராடி கீழே இறக்கினர்
திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் மேற்கூரையின் மீது படுத்து பயணம் செய்த சென்னை எலெக்ட்ரீஷியனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் இதை கண்டுபிடித்து ஒரு மணி நேரம் போராடி அவரை கீழே இறக்கினர்.
பொதிகை எக்ஸ்பிரஸ்
செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 12.15 மணிக்கு முதலாவது நடைமேடையை வந்தடைந்தது. ரெயிலில் பயணிகள் ஏறி, இறங்கிய படி இருந்தனர். ரெயிலில் எஸ்.9 மற்றும் எஸ்.10 முன்பதிவு படுக்கை வசதி பெட்டிகளுக்கு நடுவே மேற்கூரையின் இடைப்பகுதியில் ரப்பர் ஷீட் பகுதியில் வாலிபர் ஒருவர் படுத்து இருப்பதை டிக்கெட் பரிசோதகர் ரமேஷ்பாபு மற்றும் பயணிகள் பார்த்தனர்.
இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தபோது மேற்கூரையின் இடைப்பட்ட பகுதியில் ஒரு வாலிபர் படுத்து அயர்ந்து தூங்குவது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ரெயிலை நிறுத்தி வைத்தனர்.
மின்சார கம்பிகள்
ரெயில் நீண்ட நேரமாகியும் புறப்படாததால் பயணிகள் இறங்கி அதிகாரிகளிடம் விசாரித்தனர். தகவல் அறிந்த பயணிகளும் அந்த வாலிபரை பார்க்க கூடினர். ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து அந்த வாலிபரை எப்படி எழுப்புவது என்று ஆலோசித்தனர்.
ரெயிலின் மேற்கூரையில் மின்சார கம்பிகள் செல்கிறது. சுமார் 25 ஆயிரம் வாட்ஸ் சக்திகொண்ட மின் கம்பியை வாலிபர் எழுந்திருக்கும் போது தொட்டால் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழக்கக்கூடும். அதோடு ரெயில் பெட்டிகளுக்கும் மின்சாரம் பாயும் நிலை ஏற்படும்.
கீழே குதித்த வாலிபர்
எனவே முதலில் ரெயில்வே மின் பாதையில் மின்சார இணைப்பை துண்டித்தனர். பயணிகள் கூட்டம் கூடிவிட்டதால் அவர்களை போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர் ரெயில் பெட்டியின் கீழே இருந்து இடைப்பட்ட பகுதி வழியாக அந்த வாலிபரை கம்பால் குத்தி, எழுந்திருக்கும்படி சத்தம் போட்டனர்.
சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் விழித்து எழுந்தார். கீழே கூடியிருந்த கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியில் வாயை பிளந்தார். போலீசாருடன் பயணிகளும் சேர்ந்து கீழே இறங்கும்படி சத்தம் போட்டதால் அவர் உடனே மேற்கூரையில் இருந்து ரெயிலின் மறுபக்கம் கீழே குதித்து தப்பியோட முயன்றார். அவரை போலீசார் பிடித்துக்கொண்டனர்.
சென்னை எலெக்ட்ரீஷியன்
அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரது பெயர் அருண் (வயது 22) என்பதும், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அரியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிந்தது. திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்வதாகவும், சென்னை பூக்கடை பகுதியில் எலெக்ட்ரீஷியனாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
திண்டுக்கல் அருகே சிக்னலுக்காக ரெயில் நின்றபோது ரெயிலின் மேற்கூரையில் ஏறி படுத்து தூங்கியதாக அருண் கூறினார். தன்னுடன் நண்பர் ஒருவர் ஏறியதாகவும், அவர் உடனே கீழே இறங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
4 ரெயில்கள் தாமதம்
அவரை இறக்க ஒரு மணி நேரம் போராடியதால் நள்ளிரவு 1.40 மணி அளவில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. திருச்சி நோக்கி வந்த 4 ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. நிலைமை சீரான பின்பு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
ரெயிலில் இருந்து கீழே குதித்தபோது அருணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று காலை அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததால் இப்படி கூரை மீது பயணம் செய்ததாக தெரியவந்தது. திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரை சுமார் 120 கி.மீ. தூரம் இப்படி ஆபத்தான பயணம் செய்திருக்கிறார்.

